கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து அமைச்சர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது. மரணத்துக்கான காரணத்தை கண்டறிய சி.பி.சி.ஐ.டி விசாரணை தேவை.
சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட தலைவர்கள் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், பிரேத பரிசோதனை அறிக்கை அளித்தும், அறிக்கை ஏற்கத்தக்க வகையில் இல்லை எனக் கூறி உடலை வாங்க மறுத்தும் உறவினர்கள் நேற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்று வந்தார். கடந்த 13-ம் தேதி மாணவி விடுதியின் 2-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சின்னசேலம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி, மாணவியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து கடந்த இரு தினங்களாக மறியலில் ஈடுபட்டனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளியான நிலையில், அந்த அறிக்கை போலியானது என்று கூறி அவரது உறவினர்கள் நேற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போகச் செய்தனர். ஆனாலும் அவர்கள் உடலை பெற்றுக் கொள்ளவில்லை. இதனிடையே, உயிரிழந்த மாணவியின் இல்லத்துக்கு நேற்று சென்ற அமைச்சர் சி.வெ.கணேசன், பெற்றோருக்கு ஆறுதல் கூறி, முறையான விசாரணை நடத்தி காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட தலைவர்கள் வலியுறுத்தல்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி: மாணவி ஸ்ரீமதி சந்தேகத்துக்கிடமாக இறந்த செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். இச்சம்பவம் குறித்து காவல்துறை அனைவரது சந்தேகங்களையும் போக்கும் வகையில் நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டு தவறிழைத்தவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும்.
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்: மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பான வழக்கை உரிய விசாரணை நடத்தாமல் மெத்தனமாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். அந்த மாணவியைப் போல ஏற்கெனவே 5-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கனியாமூர் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாணவி ஸ்ரீமதி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற அரசு உத்தரவிட வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: மாணவி ஸ்ரீமதி, 12-ம் தேதி இரவு இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் மறுநாள் காலையில் மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவே தாய்க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய சிபிசிஐடி விசாரணை தேவை.
மக்கள் நீதி மய்யம்: மாணவி படித்த பள்ளியில் பல மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அவற்றை மூடி மறைத்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளின் நெருக்கடி, மன அழுத்தத்தை ஆராய்ந்து, உரிய தீர்வுகாண தமிழக அரசு தனிக் குழுவை அமைக்க வேண்டும்.
No comments:
Post a Comment