Thursday, July 21, 2022

தமிழகத்தில் மறைமுக விற்பனைப் பண்டமாகும் கருமுட்டை பெண்ணுடல்

 தமிழகத்தில் ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, பெருந்துறை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒரு சில மருத்துவமனைகளில் சமீப காலத்தில் நிகழ்ந்திருக்கும் மோசடி அதிர்ச்சியளிக்கிறது. 

https://www.hindutamil.in/news/opinion/columns/829806-the-female-body-is-an-indirect-commodity.html
ஈரோட்டில் தன் 16 வயது மகளது சினை முட்டையைப் பணத்துக்கு விற்று     ருக்கிறார் ஒரு பெண். போலி ஆதார் அட்டைகளைக் காட்டி, அந்தச் சிறுமியின் விருப்பத்துக்கு மாறாக, அவரிடமிருந்து பல முறை சினைமுட்டை எடுக்கப் பட்டுள்ளது.

இந்தக் கொடுமையோடு சேர்த்துத் தன் தாயின் நண்பரால் பாலியல் சித்ரவதைக்கும் அந்தச் சிறுமி ஆளாக்கப்பட்டிருக்கிறாள். தனக்கு இழைக்கப்படும் கொடுமை தாங்க முடியாமல், சேலத்தில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்திருக்கிறாள் அந்தச் சிறுமி. அதன் பிறகே விஷயம் வெளியே தெரியவந்திருக்கிறது.

ஒரு பக்கம் இயற்கையைப் பெண்ணாகப் போற்றி பாவனைகள் செய்தாலும் மறுபக்கம் பெண் என்றாலே உடல் மட்டும்தான் என்கிற அளவில் குறுக்குவதும் பெண்ணுடலை எல்லாவிதமான வன்முறைகளுக்கு இலக்காக்குவதும் நடக்கிறது. சிறுமியின் சினைமுட்டை சட்ட விரோதமாகக் களவாடப் பட்டிருப்பது, பெண்ணுடல் மீதான வன்முறையின் அடுத்த நிலை.

பணம் கொழிக்கும் வியாபாரம்

தனியார் மருத்துவமனைகள் சேவை மனப்பான்மையைத் தொலைத்து, பணம் புரளும் வணிக நிறுவனங்களாக மாறிப் பல்லாண்டுகளாகிவிட்டன. அதில் புது வரவாகச் செயற்கைக் கருத்தரிப்பு மையங்களும் குழந்தைப் பேறின்மை சிகிச்சை மையங்களும் இணைந்துவிட்டன.

செயற்கைக் கருவூட்டல் குறித்த புரிதலும் தெளிவும் இல்லாத பலரும், இந்த விஷயத்தில் மருத்துவர்களைத்தான் நம்ப வேண்டியிருக்கிறது. மக்களின் இந்த அறியாமை வணிக நோக்கில் செயல்படுகிறவர்களுக்கு வசதியாகி விடுகிறது. மக்களின் பணத்தையும் பெண்களின் உடலையும் சுரண்டிக் கொழுத்து வளர்கின்றனர்.

இவற்றில் நடைபெறும் முறைகேடுகளும் ஊழல்களும் ஊரறிந்தவை. இந்த வியாபாரத்தில் புழங்கும் பணம், இதில் ஈடுபடும் இடைத்தரகர்கள் பற்றியெல்லாம் அவ்வப்போது செய்திகள் வெளியானாலும்கூட, இவற்றை முறைப்படுத்த கடந்த ஆண்டின் இறுதிவரை எந்தச் சட்டமும் அரசால் இயற்றப்படவில்லை.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைத்தான் இந்நிறுவனங்கள் பின்பற்றிவந்தன.

சட்டங்களையே மீறுவதற்குத் தயாராக இருப்பவர்கள், கண்காணிக்க வலுவான அமைப்புகள் இல்லையென்றால், சும்மா விடுவார்களா? தமிழகத்தில் செயற்கைக் கருவூட்டல் மையங்கள் எத்தனை இருக்கின்றன, அவற்றில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது, அவற்றை நாடி வருவோருக்கு எந்த மாதியான சிகிச்சை முறைகள் வழங்கப்படுகின்றன, ஓராண்டில் எத்தனை பேருக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது, சிகிச்சையின் சாதக பாதகங்கள் அவர்களுக்குச் சொல்லப்பட்டனவா, சிகிச்சை பெறுபவர்கள், விந்தணு/சினைமுட்டை தானம் அளிப்பவர்கள் போன்றோர் பற்றிய முழுத் தரவுகள் சரிபார்த்து உறுதிப்படுத்தப்பட்டனவா என்பதெல்லாம் யாரால் கண்காணிக்கப்படுகின்றன?

பார்த்தால் தெரியாதா?

செயற்கைக் கருவூட்டல் ஒழுங்குமுறைச் சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டது. குழந்தைப் பேறின்மை சிகிச்சை, செயற்கைக் கருவூட்டல் தொடர்புடைய அனைத்தும் இந்தச் சட்டத்தின்கீழ் வரும்.

அதன்படி விந்தணு, சினைமுட்டை சேகரிப்பு மையங்கள் தொடங்கி, இந்தச் சிகிச்சை தொடர்பான அனைத்து மருத்துவமனைகளும் முறைப்படி பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். விந்தணு, சினைமுட்டை தானம் அளிப்பவர்களுக்கான நெறிமுறைகளும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆணாக இருந்தால் 21 - 55 வயதுக்குள்ளும் பெண்ணாக இருந்தால் 23 - 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஒரு பெண்ணிடமிருந்து ஒரே ஒரு முறைதான் சினைமுட்டையைப் பெற வேண்டும், அதிகபட்சம் ஏழு முட்டைகள் வரை பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நெறிமுறைகள் அமலில் இருந்தன.

அதன்படி சினைமுட்டை தானம் தரும் பெண்ணின் வயது முதலில் 18 வயது எனவும் பின்பு 21 எனவும் திருத்தப்பட்டது. இதைக் கடைப்பிடித்திருந்தால்கூட ஈரோட்டுச் சிறுமியிடம் இருந்து சினைமுட்டையைப் பெற்றிருக்க முடியாது. நான்கு ஆண்டுகளாகத் தன்னிடமிருந்து சினைமுட்டை எடுக்கப்படுவதாக அந்தச் சிறுமி தெரிவித்திருக்கிறார்.

என்னதான் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்தாலும் சிறுமியைப் பார்த்தாலே, அவர் 21 வயதுக்குக் குறைவாகத்தான் இருப்பார் என்பது மருத்துவர்களுக்குத் தெரியாதா? தெரிந்திருந்தும், பணத்தாசை அவர்களது கண்ணை மறைத்திருக்கிறது.

அரசு பொறுப்பேற்க வேண்டும்

‘‘இந்தியாவில் செயற்கைக் கருவூட்டல் மையங்கள், குழந்தைப் பேறின்மை சிகிச்சை மையங்கள் போன்றவற்றைக் கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் சட்டத்துக்கான விதிமுறைகளைக் கடந்த ஜூன் மாதம்தான் மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இந்தத் துறையில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது.

ஆனால், அது முழுக்கத் தனியார்வசம் இருக்கிறது. அரசே இதை ஏற்று நடத்தினால் தேவையற்ற சிகிச்சை முறைகளைத் தடுக்கலாம். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைப் பேறின்மை சிகிச்சை மையங்களையும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செயற்கைக் கருவூட்டல் மையங்களையும் அமைத்தால், சிகிச்சை என்கிற பெயரில் பெண்ணின் உடல் சுரண்டப்படுவது தவிர்க்கப்படும்.

இனப்பெருக்கம் சார்ந்த இந்த நடைமுறைகளில் பெண்ணின் உடல் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறது. விந்தணு தானத்தைப் போல எளிதானதல்ல சினைமுட்டை தானம். இத்தனை முறைதான் சிகிச்சை மேற்கொள்ள முடியும், சிகிச்சையால் இதுபோன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்று இந்தச் சிகிச்சையில் எவ்வளவோ சிக்கல்கள் உண்டு.

அதனால், அரசு இதில் போதிய கவனம் செலுத்த வேண்டும்’’ என்கிறார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கச் செயலாளர் டாக்டர் சாந்தி.

குழந்தைப் பேறு தொடர்பான சிகிச்சை முறைகளில் முறைகேடு நடக்கவும் இடைத்தரகர்களின் தலையீடு அதிகரிக்கவும் வறுமை ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும் குழந்தைப்பேறு, வாரிசுரிமை, ஆண்மை, பெண்மை தொடர்பாக நம் சமூகத்தில் வேரூன்றியிருக்கும் பிற்போக்குச் சிந்தனைகளே இதுபோன்ற அறம் பிறழ்ந்த செயல்கள் நடைபெறக் காரணமாக இருக்கின்றன.

ஏதோவொரு விதத்தில் தனக்குக் குழந்தை பிறந்துவிட்டால் போதும், தன்னுடைய ‘ஆண்மை’ நிரூபிக்கப்பட்டுவிடும் என்றே பெரும்பாலான ஆண்கள் நம்புகிறார்கள்.

பெண்களோ இவர்களுக்கு ஒருபடி மேலே போய் தாய்மை அடையவில்லையென்றால், பெண்ணாகப் பிறந்ததே பாவம் என்கிற அளவுக்குக் குமைகிறார்கள். இதற்கு நடுவே குடும்பத்தினரின் நச்சரிப்பு வேறு. குலம் தழைக்க வாரிசு வேண்டும் என்பதற்காகவும் நாலு பேருடைய வாயில் விழக் கூடாது என்கிற பதற்றத்திலும் மருமகளைப் பாடாய்ப்படுத்துபவர்கள் உண்டு.

‘பெண்மை’ எனும் பெரும்சுமை

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயது மங்கத்தாயம்மா செயற்கைக் கருவூட்டல் முறையில் 2019இல் இரட்டைப் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த சம்பவம் பலருக்கும் நினைவிருக்கும். மாதவிடாய் நின்ற பிறகு எழுபது வயதுக்கு மேல் செயற்கைக் கருவூட்டல் முறையில் ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொள்வது சரியா என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை.

மாறாக, உலகின் மிக வயதான ‘அம்மா’ என அவர் புகழப்பட்டார். ஆனால், கடந்த ஆண்டு அவருடைய கணவர் ராஜு 84 வயதில் இறந்துவிட, குழந்தைகளை வளர்க்கச் சிரமப்படுகிறார் மங்கத்தாயம்மா. தொழில்நுட்ப வசதி இருக்கிறது என்பதற்காகப் பெண்களின் உடலைப் பரிசோதனைக்கூடம் ஆக்குவது அறத்துக்குப் புறம்பானது.

காரணம், இதுபோன்ற சிகிச்சை முறைகளில் ஒவ்வொரு நிலையிலும் பெண்ணுடலே அதிகபட்ச வேதனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. குடும்பங்கள் அதை உணர வேண்டும். மக்களின் ஆசையைப் பணமாக மாற்றும் மருத்துவமனைகளின் செயலை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

- பிருந்தா சீனிவாசன், தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

No comments:

Post a Comment