Thursday, July 14, 2022

"அந்தகனே நாயகனானால் செந்திருவைப் போலங்கைச் சிங்காரித்தென்ன பயன்'

 தமிழை அறிந்து தான் இணைய வரலாற்று ஆய்வாளரும், Youtube ஆய்வாளரும் பதிவுகளை இடுகின்றனரா? இல்லை வேண்டுமென்றே, தன்னை பின் தொடர்பவர்களை முட்டாளாக்குகின்றனரா?

தளி இராஜசேகர்

சுமார் 7 லட்சம் பார்வையாளர்கள் கொண்ட யூடுப் தளத்திற்கும், இன்னும் பல முகநூல், ட்விட்டர் தளத்திற்கு ஒரே script இங்கிருந்து தான் சென்றுள்ளது. அது,
"அந்தகனே நாயகனானால் செந்திருவைப் போலங்கைச் சிங்காரித்தென்ன பயன்'
- மன்னனே நாயக்கனாக (தெலுங்கனாக) இருக்கும்போது அழகு நடையில் கவிபாடி என்ன பயன்' என்று இதற்கு பொருள். மன்னர்காலத்திலேயே துணிந்து தமிழ்ப்புலவர்கள் தெலுங்கராட்சியை எதிர்த்தனர், ஆனால் இன்று தமிழர்களுக்கு முதுகெலும்பில்லை"
அதாவது, நாயக்கர் காலத்தில் தமிழுக்கு மரியாதை இல்லை என சுப்பிரதீபக் கவிராயர் பாடியதாக பரவலாகக் கூறப்படுகிறது.
ஆனால் உண்மையில் இந்த பாடலைப் பாடியவர் அவர் அல்ல. அது பாடப்பட்டது எந்த நாயக்க அரசர்கள் மீதும் அல்ல. அப்பாடல் பாடப்பட்டதும் தெலுங்கு ஆட்சியை எதிர்த்தும் அல்ல. அந்த பாடலுக்கான பொருளும் அதுவல்ல. நாயகன் என்ற பெயர் வந்ததும் அது நாயக்க மன்னர் மீது பாடப்பட்டது என தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

இப்பாடலைப் பாடியது ஒருவருக்கு கண்பார்வையும், ஒருவருக்கு காலும் செயல்படாத இரட்டைப் புலவர் பாடியது. இவர்கள் வாழ்ந்த காலம் 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. ஆனால், திருமலை நாயக்கர் 17 ஆம் நூற்றாண்டு மன்னர். அந்த இரட்டைப் புலவரில் ஒருவர் முதலடி பாட, மற்றொருவர் இரண்டாம் அடியினை சிலேடையாக பாடி பாடலை முடிப்பார்.
இரட்டைப் புலவர் மூடரைப் பாடிய அந்தப்பாடல்,
'மூடர் முன்னே பாடல் மொழிந்தால் அறிவரோ
ஆடெடுத்த தென்புலியூர் அம்பலவா'
எனப்பாடி முடவர் நிறுத்தினார்.
அக்குறிப்பினை அறிந்த கண்பார்வையற்றவர்,
'-ஆடகப்பொற்
செந்திருவைபோல் அணங்கைச் சிங்காரித்துஎன்னபயன்
அந்தகனே நாயகனானால்?'
எனப்பாடி முடித்தார்.
பாடலின் வரலாறு:
சிதம்பரம் தென்புலியூர் அம்பலவாணனை வழிபட்ட பின் இரட்டை புலவர் சென்றுகொண்டிருந்தனர். வழியில் தென்பட்ட ’சேடன்’ சேடன் எனும் பெருஞ்செல்வம் படைத்த செல்வந்தன் ஒருவன் விலை உயர்ந்த ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு போவதைப்பார்த்து அவனைப்பற்றிப் புகழ்ந்து முடவர் முதலில் பாட, குருடர் வழக்கம் போல முடித்துக் கொடுத்து பொருள் கேட்டனர். அறுசுவை மட்டுமேயன்றித் தமிழ்ச் சுவையறியாத அந்த செல்வந்தர் பாடல் கேட்டு கண்டுகொள்ளாமல் நெடுமரம்போலவே நிற்கவும் உடனே முடவரும் குருடரும் அவனை திட்டி பாடினார். அதன் பொருள்,
"அம்பலவாணப் பெருமானே! மூடர் முன் பாடலைச் சொன்னால் அவருக்குத் தெரியுமா என்று வினவினார்.
குருடர் பாடலை முடிக்கிறார்.
அதற்கு சிலேடையாக,
"திருமணம் நடக்கும்போது பெண்ணைத் திருமகள் போல அழகுபடுத்தி உட்கார வைத்திருக்கிறார்கள். அருகில் இருக்கும் மணமகன் குருடன் என்றால் அவள் அழகால் பயன் என்ன?"
செந்திரு - திருமகள், லட்சுமி
அணங்கை - பெண். இங்கு மணப்பெண்.
அந்தகன் - குருடர்.
நாயகன் - மாப்பிளை.
மேலும், தொடர்ந்து அவர்கள்
'பாடல் பெறானே பலர்மெச்ச வாழானே
நாடறிய நன்மணங்கள் நாடானே' '- சேடன்
இவன் வாழும் வாழ்க்கை யிருங்கடல்சூழ் பாரில்
கவிந்தென் மலர்ந்தென்னக் காண்.'
இப்படிப் பாடும்போது அங்கே கூட்டம் கூடிவிட்டது.
முடவர் பாடினார்.
புலவர்களால் பாடல் பெறாதவன் பலரும் மெச்சும்படி வாழமுடியாது. ஒருவன் நாடறிய நன்மணம் வீசவேண்டும் என்றால் புலவர்களால் பாராட்டுப் பாடல் பெற்றவனாக இருக்க வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து, "சேடனாகிய இவன் வாழ்க்கைப் படகு இந்த உலகில் கவிழ்ந்தால் என்ன? மலர்ந்தால் என்ன? இரண்டும் ஒன்றுதான் என குருடர் பாடலை முடிக்கிறார்.
சேடன் என்பது, சேஷன் என்பதன் தமிழ் பதம்.
பாடிய பாடலுக்கு இறங்கி, பொருள் தராமல் மறுத்த யாரோ ஒரு செல்வந்தரை பார்த்துப் பாடிய பாடல் இது. மேற்கண்ட பாடலுக்கும் நாயக்க மன்னருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேவையில்லாமல் சம்பத்தப் படுத்தியிருப்பது வரலாற்று ஆய்வாளர் என்ற போர்வையில் தமிழகத்தில் வாழும் இனங்களிடையே இனவெறுப்பையும், மொழி வெறுப்பையும் தூண்டும் சிலரால். இவர்களை நம்பி தமிழ் பாடலின் பொருளை ஆய்ந்து அறியாமல் அப்படியே மற்றவர்கள் பகிரும், அனைவரும் முட்டளாக்கப்படுகின்றனர்.
பாடலுக்கு துளியும் சம்பந்தமில்லாத பொருள் தரவை நம்பி எவ்வாறு யூடுப் வீடியோ முதல் புத்தகங்கள் வரை எழுதுகின்றனர்.
https://vaettoli.blogspot.com/2015/11/blog-post_25.html
வரலாற்று ஆய்வுத் துறையில் "இனவெறுப்பு தூண்டுவது எப்படி?"என்ற பாடத்தையும் எப்போது சேர்த்தார்கள் என்று தெரியவில்லை. இனவெறுப்பை தூண்டும் செய்திகள் தான் தமிழர் வரலாறு அவை தான் எனது இழையில் வரவேண்டும் எதிர்பார்ப்பவர்கள் அவர்களாகவே நீங்கிக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Egmore 1800 Crore Land - Kirk church is Indian Govt Defence Land

St. Andrew's Church claim on land rejected https://www.thehindu.com/news/national/St.-Andrews-Church-claim-on-land-rejected/article16147...