Tuesday, July 26, 2022

மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் பிளவு ஏற்படுத்த‌ என்ஜிஓ பணம் பார்க்கும் தொழில்

சேவையில் தொடங்கி பணம் பார்க்கும் தொழிலாக மாறுகிறதா என்ஜிஓக்கள்: சந்தேகங்களை கிளப்பும் நடவடிக்கைகள்: லாப நோக்கம் என்றால் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் 2022-07-25@ 02:13:36பெரம்பூர்: அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு காலங்களில் பெயர் மாற்றம் அடைந்து நடத்தப்பட்டு வருவதாக கூறப் படுகிறது. இருந்தபோதிலும், 1945ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு வலிமையான சக்தியாக இந்த தொண்டு நிறுவனங்கள் செயல்பட தொடங்கின. 
உலகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் லட்சக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் மட்டும் சுமார் 32 லட்சம் தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக ஒரு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. தொண்டு நிறுவனங்கள் எனப்படும் என்ஜிஓக்கள் எதற்காக தொடங்கப்பட்டன.
, அதன் பணிகள் என்ன என்று பார்த்தால் அனைத்து பாதிக்கப்பட்ட மக்களையும் அரசே முன்நின்று அவர்களை காப்பாற்ற முடியாது. அதற்காக அரசு சார்ந்த தொண்டு நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் என பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நிறுவப்பட்டன.
சேவையின் அடிப்படையில் மட்டுமே இந்த தொண்டு நிறுவனங்கள் ஆரம்ப காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டன.


அதன்பிறகு மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், பல்வேறு பிளவுகளை அடைந்து தொண்டு நிறுவனங்கள் என்பது பணம் சம்பாதிக்கும் ஒரு குறுக்குவழி என்ற பிம்பமும் ஏற்படுத்தப்பட்டன. பல நல்ல தொண்டு நிறுவனங்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்தல், ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக ரத்த தானம் வழங்குதல், பெற்றோர் இல்லாத குழந்தைகளை பாதுகாத்தல், உடல் ஊனமுற்றோரை கவனித்தல் உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்து தற்பொழுதும் அவர்களை வாழவைத்துக் கொண்டு இருக்கின்றன.

வெளிநாட்டு நிதி உதவி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் இந்திய அரசு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணித்து சமீபத்தில் 4470 தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்தது. வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்களால் பெறப்படும் நிதி எவ்வளவு? அந்த நிதி எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து தற்போது அரசு விசாரித்து வருகிறது. இருந்தபோதிலும் சில தொண்டு நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு கொண்டுதான் இருக்கின்றன.

தலைவர்களின் பிறந்தநாள், சுதந்திர தின நாள், தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் முதியோர் இல்லங்கள், அனாதை ஆசிரமங்கள் உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்லும் தொண்டு நிறுவனங்கள் சேவையில் ஈடுபடுவது போல் தாங்கள் எடுக்கும் புகைப்படங்களை மீண்டும் பணம் ஈட்டுவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றன என்ற ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. தற்போது போக்சோ சட்டம் வந்த பிறகு புதிது புதிதாக பல சிறுவர்களுக்கான தொண்டு நிறுவனங்கள் முளைத்து விட்டன, குழந்தைகளுக்கு பள்ளிகளில் சென்று குட் டச், பேட் டச் சொல்லித் தருவது, சிறுமிகள் அல்லது சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் அவர்களுக்கு கவுன்சலிங் அளித்து வாழ்க்கையில் அடுத்து அவர்கள் எந்த வகையான முடிவு எடுக்க வேண்டும் என்பது குறித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்வது, இவ்வாறு தற்போது குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனங்கள் பல வேலைகளை செய்து வருகின்றன. மேலும் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு அவர்கள் பண உதவி மற்றும் படிப்புகளுக்காக செலவு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் உதவித்தொகை, உள்ளூரில் பெறப்படும் உதவித்தொகை, அதுமட்டும் இல்லாமல் சில நேரங்களில் அரசு கொடுக்கும் உதவித் தொகை உள்ளிட்ட உதவித்தொகைகளை வைத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. பல தொண்டு நிறுவனங்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வந்தாலும் சில தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகளில் பொதுமக்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்குமே சில சந்தேகங்கள் எழுகின்றன. குறிப்பாக போக்சோ வழக்குகளில் குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் உள்ள போலீசார் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்திற்கு வழக்கை அனுப்பி வைக்கின்றனர். சில நேரங்களில் சில தனியார் அமைப்புகள் அந்த வழக்குகளில் தலையிட்டு போலீசார் சொல்வதை கேட்க வேண்டாம் என்று கூறி நீதிமன்றத்தில் வேறு மாதிரியாக கூறுங்கள் என்று கூறி சிறுவர் மற்றும் சிறுமிகளை குழப்பத்தில் ஆழ்த்துகின்றனர். சமீபத்தில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வட சென்னைக்கு உட்பட்ட ஒரு பகுதியில் ஜூன் மாதம் 13 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனார். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு அந்த சிறுமி 17 வயது சிறுவனுடன் சென்று திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக இருவரையும் சம்பந்தப்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அழைத்தனர். இந்நிலையில் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் அவர்களை தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டாம். நீங்கள் நேரடியாக நீதிமன்றத்திற்கு செல்லுங்கள். இல்லை என்றால் எங்கள் அலுவலகத்திற்கு வாருங்கள். நாங்கள் உங்களை அழைத்து செல்கிறோம்.

அங்கு நீதிமன்றத்தில் யார் கேட்டாலும் எங்களுக்குள் எந்தவித பாலியல் சம்பந்தமான விஷயங்களும் நடைபெறவில்லை எனவும் குறிப்பாக பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துக் கொள்ளக் கூடாது எனவும் கூறுகின்றனர். காவல் நிலையத்தில் எதை எழுதி வாங்கினாலும் அது செல்லாது. நீங்கள் நீதிமன்றத்தில் சொல்வது மட்டுமே செல்லும் என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் கூறுகின்றனர். இப்படி தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண்மணி பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்களிடம் பேசும் ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. காவல் நிலையத்தில் விசாரிப்பது எதற்கும் உதவாது, காவல் நிலையத்தில் கூறுவதை நீதிமன்றத்தில் மாற்றி கூறலாம் என்று இவர்கள் கூறுவதும் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளக் கூடாது என்று கூறுவதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

எதனால் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வாறு குழந்தைகள் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் என்று கூறி அதே குழந்தைகளை நீதிமன்றத்தில் அல்லது மற்றவரிடம் ஏன் பொய் கூற வைக்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே குழந்தைகள் நலனை பாதுகாப்பதாக கூறும் தொண்டு நிறுவனங்கள் மீதும் குறிப்பாக போக்சோ வழக்குகளில் தலையிடும் தொண்டு நிறுவனங்கள் மீதும் அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும். தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் பாதிக்கப்பட்டவர்களை வைத்து பணம் பறிக்கும் தொண்டு நிறுவனங்களை கண்டறிந்து அந்த தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா