Monday, July 25, 2022

ஈவெராமசாமியார் மண்ணில் 1992ல் ஜாதி ஒழிக்கப்பட்ட நிலையின் ஆதாரம்

 சாதியம் Rajasekaran Devibharathi

என் தாத்தா அந்தக் காலத்து டிஸ்ட்ரிட் போர்டு அல்லது ஜில்லா போர்டு பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றி 1961இல் ஓய்வு பெற்றார். 1992இல் மறைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் முடிந்தபின் எங்கள் பகுதியைச் சேர்ந்த கவுண்டர் சாதியைச் சேர்ந்த நிலச்சுவான்தார் ஒருவரை அவருடைய இல்லத்திற்குச் சென்று சந்தித்து அவருடைய அனுதாபங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென நான் வலியுறுத்தப்பட்டேன். நான் அதைக் கடுமையாக ஆட்சேபித்தேன். என்னிடம் துக்கம் விசாரிக்க விரும்புபவர் என் வீட்டுக்கல்லவா வர வேண்டும், அதுதானே முறை எனக் கேட்டேன். அதை யாரும் பொருட்படுத்தவில்லை.


பிறகு என் சித்தப்பாவுடன் அந்த நிலச்சுவான்தாரைப் பார்க்கப் போனேன். அவரது மாளிகையின் நுழைவாயிலை எட்டியதுமே தாழக்குனிந்து வணங்கிக்கொண்டே முற்றத்தை அடைய வேண்டுமென அறிவுறுத்தப்ட்டேன். குறிப்பிட்ட அந்த நிலச்சுவான்தார் துயில் கலைந்து எழுந்து வருவதற்காக நண்பகல் 12 மணிவரை காத்திருந்தோம். அவர் வந்தவுடன் என்னையும் என் சித்தப்பாவையும் அழைத்தார். இருவரும் பணிவுடன் அவர் முன்னால் போய் நின்றோம். என்னை ஏற இறங்கப் பார்த்தார்
’என்னடா நீ ............... ........ன் பேரனா?’
’சாமி ஆமாங்க‘ எனச் சித்தப்பா பதிலளித்தார்.
’என்ன பண்றே?’
சொன்னேன்.
பிறகு இருபது ரூபாய்த் தாளொன்றை எடுத்து நீட்டினார். நான் அதை வாங்காமல் நின்றேன். பிறகு சித்தப்பா தன் துண்டை விரித்து ஒரு பிச்சை போல் அதைப் பெற்றுக் கொண்டார். பெருத்த அவமானத்துடன் வீடு வந்து சேர்ந்தேன்.
ஒரு கவுண்டர் வீட்டில் ஏதாவது இழவு என்றால் துக்கம் விசாரிக்க அவரே வருவார். கீழ்ச்சாதிக் காரர்கள் அவரை அவரது மாளிகைக்குச் சென்று சந்தித்து அவரிடம் பிச்சை வாங்கிக்கொண்டு வர வேண்டும்.




கேட்டால் நாங்கள் சாதிப் பாகுபாடு பார்ப்பதில்லை என்பார்கள். தங்கள் சாதிப் பெண்களைக் காதலிக்கும் கோகுல்ராஜ் போன்ற தலித் இளைஞர்களை வெட்டுவது இதுபோன்ற சாதியப் பண்பாட்டின் ஒரு அங்கமே.

No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...