Sunday, July 31, 2022

சூரியன் மேற்கிலிருந்து உதயமாகும் என்று நபி கூறினார்கள். அறிவியல் புரட்டு

சூரியன் மேற்கிலிருந்து உதயமாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அபூதர்(ரலி) புகாரி 3199)

 நபி(ஸல்) சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம் வந்து அது எங்கு செல்கிறது என்று உனக்கு தெரியுமா? என்றார்கள். அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதருமே இதனை அறிவார்கள் என்றேன். அது இறைவனின் அதிகாரத்துக்குட்பட்ட இடத்தில் இயங்கிக் கொண்டு தொடர்ந்து இயங்க அனுமதி கேட்கிறது. அனுமதி அளிக்கப்படுகிறது. ஒருநாள் அதன் அனுமதி ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. வந்த வழியே திரும்பி சென்றுவிடு என்றுக் கூறப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அபூதர்(ரலி) புகாரி 3199)

 

என்றொரு மேற்சொல்லப்பட்ட ஹதீஸின் வசனத்திற்குச் சான்றாக, சூரியன் மேற்கில் உதிக்கும் வாய்ப்பு உள்ளது என்று நாசா உறுதிப்படுத்தியதாக ஒரு செய்தித்தாள் போன்ற படம் தரப்படுகின்றது. அது கராச்சியில் இருந்து வெளியிடப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்படுகிறது. நண்பர் ஷாகுல் ஹமீது. இதன்பொருட்டு எனது விளக்கத்தினைக் கேட்டிருந்தார். அதற்குப் பதிலாக அங்கே இரண்டு பின்னிடுகைகளை வேடிக்கையாக இட்டு வந்தேன் என்றாலும், இன்னும் சற்று மேலதிகச் செய்திகளோடு தெரிவித்தால் நன்றாக இருக்கும் என்பதால் இப்பதிவு.

மதநூல்களில் மலிந்து கிடக்கும் அறிவியல் புரட்டுகளுக்கான சப்பைக்கட்டுகளில் இதுவும் ஒன்று என்பதைத் தெளிவு படுத்தவே இப்பதிவு. முதலில் நாம் நம் சூரிய குடும்பத்தின் கோள்களின் சில தன்மைகளைக் குறித்துப் பார்த்து விடுவோம்.
கோள்களில் திசை என்பதை நாம்தான் தீர்மானிக்கிறோம். கோள்கள் தன்னைத்தானே சுற்றிக்கொள்கின்றன என்றால் அதற்கென்று ஒரு அச்சு (axis) இருக்கும். அதன்படிக்கு அதன் ஒரு பகுதியை மேல் என்றும் மறுபகுதியைக் கீழ் என்றும் கொண்டு, மேற்பகுதி வடக்கு என்றும், கீழ்பகுதி தெற்கு என்றும், அதனைப் பார்த்தவாறு நாம் நின்றால் நமக்கு வலது புறம் கிழக்கு என்றும், இடது புறம் மேற்கு என்றும் ஒரு வசதிக்காக வரையறுத்து வைத்திருக்கிறோம். True North என்பது போல் True East என்றோ, True West என்றோ நாம் சொல்லவே முடியாது. அதாவது வடதுருவம், தென் துருவம் என்று சொல்வதைப் போல், கிழக்கு துருவம், மேற்கு துருவம் என்று எந்தவொரு புள்ளியையும் நாம் சொல்வதில்லை.
நல்லது, அவ்வகையில் கோள்கள் தன்னைத்தானே சுற்றும் திசைகள் குறித்துப் பார்ப்போம் இனி. நம் சூரிய குடும்பத்தின் 8 கோள்களில் 6 கோள்கள் மேற்கிலிருந்து கிழக்காகவும், 2 கோள்கள் மட்டும் கிழக்கிலிருந்து மேற்காகவும் தன்னைத்தானே சுற்றிக்கொள்கின்றன. அந்த இரண்டு கோள்கள் எவையெவையென்றால், வீனஸ் மற்றும் யுரேனஸ். இவை இரண்டு மட்டும் எதிர்த்திசையில் சுற்றுவதற்குக் காரணம் முன்பொரு சமயத்தில் ஏற்பட்ட பாரிய குறுங்கோள் மோதலாக இருக்கும் என்று கணிக்கின்றனர்.
சரி, எல்லாக் கோள்களிலும் சூரியன் கிழக்கில்தான் உதிக்குமா என்றால். இல்லை. ஏன், நம் பூமியில் கூட சூரியன் கிழக்கில்தான் உதிக்கின்றது என்று சொல்வதற்கில்லை. ஒரு 6 மாதங்கள் வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையேயும், மறு 6 மாதங்கள் தெற்கிற்கும் கிழக்கிற்கும் இடையேயும்தான் உதிக்கும். காரணம் புவி தன் சுற்றுப்பாதை அச்சில் (Orbital Axis) இருந்து 23.44 பாகைகள் சாய்வாக இருப்பதுதான். இதனை Axial Tilt என்பார்கள் ஆங்கிலத்தில். நம் சூரிய குடும்பத்தில் ஒவ்வொரு கோள்களும் ஒவ்வொரு அச்சுச்சாய்வுகளைக் கொண்டுள்ளன.
புதன் - 0.03 பாகைகள்
வெள்ளி - 2.64 பாகைகள்
பூமி - 23.44 பாகைகள்
செவ்வாய் - 25.19 பாகைகள்
வியாழன் - 3.13 பாகைகள்
சனி - 26.73 பாகைகள்
யுரேனஸ் - 82.23 பாகைகள்
நெப்ட்யூன் - 28.32 பாகைகள்
இதில் யுரேனஸ் கிட்டத்தட்ட கிடைமட்ட அளவிற்கு சாய்வு அச்சினைக் கொண்டிருப்பதால் இதனை உருளும் கோள் என்று கூட சொல்வார்கள். இக்கோளில் சூரியன் உதிக்கின்றது என்றே சொல்ல முடியாது. இது சூரியனைச் சுற்றி வர 84 புவி ஆண்டுகள் ஆகும். எனவே, 42 புவி ஆண்டுகள் அளவிற்கு யுரேனஸின் ஒரு பகுதி இரவாகவும் மறுபகுதி பகலாகவும் இருக்கும்.
ஆக, கோள்களின் சுழற்சி அமைப்பு எவ்வாறு இருக்கும் என்று பார்த்து விட்டோம். இனி இது மாறுவதற்கு வாய்ப்பு உண்டா? நியூட்டனின் முதலாம் விதி விளக்குவதைப் போல்,
(ஒரு பொருளின் மீது விசை ஏதும் செலுத்தாதிருந்தால், அப்பொருள் தான் இருந்த தன் அசையா நிலையிலோ அல்லது தான் ஒரு நேர்க்கோட்டில் ஒரே சீரான விரைவோடு முன்பு சென்று கொண்டிருந்த தன் நிலையிலோதான் தொடர்ந்து இருந்துவரும்.)
விண்வெளியில் எந்தவொரு பொருளும் அதன் போக்கிலேயே இருக்கும், வேறொரு விசை அதன் மீது செயல்படாத வரையில். ஒருவேளை, ஏதேனும் ஒரு பெரிய விண்கல் வந்து பூமியின் கிழமேற்காக உரசுமாறு மோதுமேயானால், பூமி கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுவதற்கு ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது. ஆனால், அப்படி ஒரு நிகழ்வு ஏற்படுமேயானால், பூமி முதலில் ஒரு இறந்த கோளாக மாறிவிடும். பூமி கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகிறது, சூரியன் மேற்கில் உதிக்கின்றது என்பதைக் காண பூமியில் யாரும் இருக்க மாட்டோம். 😃
இனி பதிவின் துவக்கத்திற்கு வருவோம். ஹதீஸ் வசனம் கூறுவது போல், ஒரு ஆளைத் திரும்பிப் போ என்று சொல்வதைப் போல் எல்லாம் சூரியனைத் திரும்பிப் போக வைக்க முடியாது. (இறைவனால் முடியாதது ஏதுமில்லை என்று சப்பைக் கட்டு கட்டலாம். ஆனால், இயற்பியல் விதிகளின் படி அது சாத்தியமே இல்லை. கடவுள் என்று ஒன்று இருந்தால், இயற்பியல் விதிகளுக்கு கடவுளும் விதிவிலக்கல்ல.) இன்னும் சொல்லப் போனால், சூரியன் நகர்வதால் நமக்கு இரவு பகல் ஏற்படுவதில்லை. புவி சுழற்சிதான் காரணம் என்பது அன்றைக்கு முகமதுவிற்குத் தெரிந்திருக்காது என்றே எடுத்துக் கொள்வோம்.
ஆனால், இசுலாமிய இறைநம்பிக்கையாளர்கள் வழமைபோல் அறிவியலைத் துணைக்கழைத்து, நாசாவே சொல்லியிருக்கின்றது, பூமி கிழமேற்காகச் சுற்றும் வாய்ப்பிருக்கின்றது என்று ஒன்றைச் சொல்லியிருக்கிறார்கள். அதில், செவ்வாய்க்கிரகம், மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றும் வேகத்தைக் குறைத்துக்கொண்டு ஒரு மாத கால இடைவெளில் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றத் துவங்கி விட்டது. இதற்குப் பெயர் Retrograde Motion என்று அறிவியல் சொல்கிறது. எனவே, நம் பூமியும் அப்படி ஒரு நாள் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றும் வாய்ப்பிருக்கிறது. இதைத்தான் எங்கள் குர்ஆன் சொல்கிறது என்கிறார்கள்.
இவர்கள் எதனையும் சுயஅறிவு கொண்டு ஆராயமாட்டார்கள் போலும், யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள் அல்லது அதனைத் தங்கள் நம்பிக்கையை வலுப்படுத்திக்கொள்ள பயன்படுத்திக்கொள்வார்கள் போலும். அறிவியல் யாரையும் அறிந்துகொள்வதில் இருந்து தடுப்பதில்லை. இப்படித்தான் அணுகவேண்டும் என்றும் வரையறுப்பதில்லை. இவர்களுக்கு அறிவியலைப் படிப்பதில் அப்படி என்ன அலுப்பு என்று தெரியவில்லை.
Retrograde Motion என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்படுவதில், course of Mars என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி என்றால், செவ்வாயின் நகர்வுதானே தவிர சுழற்சி அல்ல. எனவே, செவ்வாய் கிரகமானது தன் சுழல் அச்சில் இருந்து மாறிச் சுழல்வதில்லை, மாறாக, தன் சுற்றுப்பாதையில் இருந்து சற்றே பின் திரும்பி வந்துப் பின் மீண்டும் முன் செல்வது போல் தோன்றும். இது ஒரு மாயத்தோற்றம்தானே தவிர உண்மையாக நிகழும் நிகழ்வல்ல.
அதன்படிக்கு நம் பூமியில் இருந்து அடுத்தடுத்து இருக்கும் தொலைதூரத்துக் கோள்களான, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன் ஆகியவை இந்த விளைவிற்கு உட்படும். இதனை நாம் பூமியில் இருந்து, கோள்களின் தொலைவைப் பொறுத்து , 2 முதல் 6 மாதங்கள் வரையிலான கால அளவில் இத்தோற்றத்தை ஒவ்வொரு கோளுக்கும் காண முடியும். எனவே, செவ்வாய்க்கிரகத்தில் சூரியன் மேற்கில் உதிப்பதில்லை. செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதும், சுழற்சியைக் குறித்தது அல்ல, சுற்றுப்பாதை நகர்வைக் குறித்தது. தவிரவும், அது உண்மையான நிகழ்வு அல்ல. அது ஒரு மாயத்தோற்றம்.
அப்படியெல்லாம் சூரியனை, தம்பி நீ போய் அந்தப்பக்கமாகச் சுற்றிக்கொண்டு வா என்றெல்லாம் யாரும் சொல்ல முடியாது. எல்லாமே மதத்தின் பெயரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதுதான்.
Retrograde Motion குறித்த இரு செய்திகளுக்கான உரலிகள் முதல் இரு பின்னிடுகையிலும், இப்பதிவினை மேற்கொள்ளக் காரணமான நண்பரின் பதிவிற்கான உரலி மூன்றாம் பின்னிடுகையிலும் இருக்கின்றன.


No comments:

Post a Comment