Saturday, July 16, 2022

‘நிலை மறந்தவன்’ -தெய்வத்தின் பெயரால் மோசடி வியாபாரத்தின் கதை


















https://m.dinamalar.com/vimar-detail.php?id=3163 ஜூலை 15,2022 தயாரிப்பு - தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ்; இயக்கம் - அன்வர் ரஷீத்; இசை - ஜேக்சன் விஜயன், வினாயகன், சுஷின் ஷியாம் நடிப்பு - பகத் பாசில், நஸ்ரியா, கவுதம் மேனன்; ரேட்டிங் - 4/5

இந்திய சினிமாவில் இப்படி ஒரு சமூக அக்கறையுள்ள படமா என ஆரம்பத்திலிருந்து கடைசி வரை வியக்க வைக்கும் ஒரு படம் தான் இந்த 'நிலை மறந்தவன்'.

மலையாளத்தில் 'டிரான்ஸ்' என வெளிவந்த படத்தின் தமிழ் டப்பிங் தான் இந்தப் படம். இயக்குனர் அன்வர் ரஷீத் மிகப் பெரிய சமுதாய கண்ணோட்டத்துடன், அக்கறையுடன், ஏமாந்து கொண்டு திரியும் மக்களுக்காக ஒரு பாடமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.


கன்னியாகுமரியில் தனது மன நோய் பாதிக்கப்பட்ட தம்பி தற்கொலை செய்து கொண்டதால் அதையெல்லாம் மறக்க மும்பை செல்கிறார் பகத் பாசில். அங்கு வேலை தேடும் முயற்சியில் இறங்குகிறார். கிறிஸ்துவ மதத்தில் போலி பாதிரியார்களை உருவாக்கி, தான் சார்ந்த அந்த மதத்தின் மக்களிடம் ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பறிக்கும் கவுதம் மேனன், செம்பன் வினோத் ஜோஸ் குழுவிடம் சிக்கிக் கொள்கிறார் பகத். இந்து மதத்தைச் சேர்ந்தவரான பகத்தை, கிறிஸ்துவ பாதிரியாராக போலியாக மாற்றி, மதப் பிரசங்கம் செய்து, அந்த மக்களிடம் பணம் பறிக்கும் வேலையைக் கொடுக்கிறார்கள். குறுகிய காலத்திலேயே புகழ் பெறும் பகத், சுகபோக வாழ்க்கை வாழ்கிறார். அவரை வைத்து பிழைப்பு நடத்தும் கவுதம், செம்பன் பல கோடிகளை அள்ளுகிறார்கள். ஒரு கட்டத்தில் தான் செய்வது பாவம் என உணர்கிறார் பகத். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இப்படியெல்லாம் கூட ஒரு கதையை உருவாக்கி, பரபரப்பான திரைக்கதை அமைத்து, மதத்தின் பெயரால் ஏமாற்றிப் பிழைக்கும் ஒரு கார்ப்பரேட் கொள்ளைக் கூட்டத்தைப் பற்றி படமெடுக்க முடியுமா என ஆச்சரியப்பட வைக்கிறார் இயக்குனர். அப்பாவி மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார். அதற்காகவே இயக்குனருக்கு ஒரு பெரிய 'சபாஷ்' போடலாம். அற்புதக் கூட்டம் என அளவில்லாத பொய்களை அவிழ்த்து விடும் கூட்டத்தின் தோலை உரித்திருக்கிறார் இயக்குனர். ஒரு நெகிழ வைக்கும் சென்டிமென்டை வைத்து போலி மதக் கும்பலுக்கு முடிவு கட்டுவது தியேட்டர்களில் கைத்தட்டலை வரவழைக்கிறது.

கன்னியாகுமரியில் 'மோட்டிவேஷனல் ஸ்பீச்' வகுப்புகள், அதாவது 'ஊக்கமளிக்கும் பேச்சு' பயிற்சிகளை வழங்குபவர் பகத் பாசில். அங்கிருந்து அவரை அப்படியே 'அற்புதக் கூட்டம்' நடத்தும் போலி பாதிரியாராக அற்புதமாக உருமாற்றியிருக்கிறார் இயக்குனர். பகத் பாசிலைத் தவிர வேறு யாரும் இந்த அளவிற்கு நடித்திருக்க மாட்டார்கள் என காட்சிக்குக் காட்சி மிரட்டுகிறார் பகத். அதிலும் ஆவேசமாகப் பேசி, நோய்வாய்ப்பட்டவர்களை குணமடைய வைப்பதாக ஆட்களை வைத்து ஏற்பாடு செய்யும் காட்சிகள் படம் பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைக்கிறது. இப்படியெல்லாமா கடவுள் பெயரைச் சொல்லி கொள்ளை அடிக்கிறது ஒரு கூட்டம் என சாதாரண மக்களுக்கும் புரியும்படி சொல்லியிருக்கிறார்கள். பகத்தும் அவரை வைத்து பிழைப்பு நடத்துபவர்களும் திருந்தவே மாட்டார்களா என யோசிக்கும் போது சரியான முடிவு கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தனது மதத்தைச் சேர்ந்த அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் கார்ப்பரேட் களவாணிகளாக கவுதம் மேனன், செம்பன் வினோத் ஜோஸ். தீவிர மதப் பற்றாளர்களின் அப்பாவித்தனம் இப்படிப்பட்டவர்களுக்கு கோடி கோடியாக சம்பாதிக்கும் வாய்ப்பைக் கொடுத்துவிடுகிறது. அப்படிப்பட்ட கொள்ளை கூட்டத்திற்கு அவர்கள் மதத்தைச் சேர்ந்த ஒரு அப்பாவியை வைத்தே முடிவு கட்டுவது எதிர்பாராத ஒன்று.

படத்தின் பாதிக்குப் பிறகுதான் நஸ்ரியா வருகிறார். காதலால் வாழ்க்கையில் ஏமாந்து போன ஒரு கதாபாத்திரம். குடிப் பழக்கமும், போதைப் பொருள் பழக்கமும் உள்ள ஒரு பெண். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நஸ்ரியாவைப் பார்ப்பது தமிழ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

தமிழில் இதுவரை இப்படி ஒரு முழு படம், ஏன் ஒரே ஒரு காட்சி கூட வந்ததில்லை. இந்து மத சாமியார்களை பல படங்களில் கிண்டலடித்த சில தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு, கிறிஸ்துவ மதத்தில் கோடி கோடியாக சம்பாதிக்கும் இப்படிப்பட்ட போலி மத போதகர்களைப் பற்றி ஒரு காட்சி கூட எடுக்க தைரியம் இல்லையே என இப்படம் பார்க்கும் போது யோசிக்க வைக்கிறது.

இக்கதையை வேண்டுமென்றே எழுதியிருப்பார்கள் என ஒரு கூட்டம் பேசும். ஆனால், இக்கதையை எழுதியவரே வின்சென்ட் வடக்கன் என்ற ஒரு கிறிஸ்துவர்தான். மலையாளத்தில் வந்த படம் என்றாலும், தமிழில் டப்பிங் செய்திருக்கிறார்கள் என்று சொல்லவே முடியவில்லை. அந்த அளவிற்குப் பொருத்தமாக டப்பிங் செய்திருக்கிறார்கள். தமிழுக்கான வசனங்களும் பவர் புல்லாகவே அமைந்திருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.

நிலை மறந்தவன் - உண்மையை உரக்கச் சொல்பவன்

திரைப் பார்வை: நிலை மறந்தவனின் பின்னால்…!

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/826652-screen-view.html

கடந்த 2020 பிப்ரவரியில் மலையாளத்தில் வெளியாகி, கேரளத்தில் எதிர் விமர்சனங்களை கண்ட படம் ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் ‘ட்ரான்ஸ்’. மதத்தின் பெயரால் நடக்கும் வியாபாரத்தைப் பட்டவர்த்தனமாக தோலுரித்துக் காட்டிய இந்தப் படம், பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் மறு தணிக்கையில் சிக்கியும் வெளியீடு தாமதமானது. தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி கவனம் ஈர்க்கும் படமாக இருந்தபோதும், தமிழில் ‘நிலை மறந்தவன்’ என்கிற தலைப்புடன் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

பொதுவாக, எந்தவொரு பெரு மதம் குறித்தும் வீச்சு மிகுந்த திரைப்படம் வழியாக விமர்சிக்கப்படுவது அபூர்வம். காரணம், விமர்சிக்கப்படும் பெரு மதத்தைப் பின்பற்றும் வெகு மக்களின் உணர்வை அது காயப்படுத்தும் என்று கூறி விமர்சனங்கள் தவிர்க்கப்பட்டே வந்திருக்கின்றன.

ஆனால், புத்தாயிரத்துக்குப் பிறகு இந்த நிலை படைப்பாளிகள் மத்தியில் மாறியிருக்கிறது. பார்வையாளர்களும் ‘இருப்பதைத்தானே எடுத்துக் காட்டுகிறார்கள்’ என்று ஒரு திரைப்படத்தின் உள்ளடக்கத்தை ரசிக மனநிலையில் பார்க்கப் பழகியிருக்கிறார்கள். அதனால்தான், ‘ட்ரான்ஸ்’ போன்ற படங்கள் வரவேற்பைப் பெற்றுவிடுகின்றன.

வின்சென்ட் வடக்கன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, அன்வர் ரஷித் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் தமிழ் மொழிமாற்றுப் பதிப்பில், தமிழ் வசனங்கள் படத்தின் உள்ளடக்கத்தை இன்னும் கூடுதலாகத் துலங்கச் செய்திருக்கின்றன.

தாய், தம்பியின் தற்கொலைக்குப் பின்னர், மனநிலை சிதைந்து தன்னம்பிக்கைப் பேச்சாளராக மாறுகிறார் கன்னியாகுமரியைச் சேர்ந்த விஜு பிரசாத். அவருடைய தோற்றம், ‘பப்ளிக் ஸ்பீக்கிங் ஸ்கில்’ ஆகியவற்றைக் காணும் கார்ப்பரேட் மாபியா மனிதர்களான சாலமன் டேவிஸ் (கௌதம் மேனன்), ஐசக் தாமஸ் (செம்பன் வினோத்) ஆகிய இருவரும், விஜுவை அழைத்து வந்து ‘ஜோஸ்வா கால்டன்’ என்று பெயரை மாற்றுகிறார்கள்.

அவருக்குப் பயிற்சியளித்து ஒரு மதபோதகராக மாற்றுகிறார்கள். வறுமை, குடும்பத்தின் அழிவு என வாழ்வில் சிதைந்த ஒருவரே, பல்வேறு தனிப்பட்ட பிரச்சினைகளால் மனம் சிதைந்து ஆறுதல் தேடும் ஆயிரக்கணக்கான மனிதர்களை மதத்தின் பெயரால் போலியாக ஆற்றுப்படுத்தும் வணிகத்தின் தூண்டிலாக மாறுகிறார். பின்னர் அதிலிருந்து அவர் எப்படிப்பட்ட சூழ்நிலையில் விடுபட முன்வந்தார், அதற்காக அவர் என்ன செய்தார் என்பதுதான் படம்.

‘எஸ்தர்’ என்கிற கதாபாத்திரத்தில் வரும் நஸ்ரியா தொடங்கி, தொலைக்காட்சிப் பேட்டியாளராக வரும் சௌபின் ஷாகீர் வரை நிறைய திறமையான நடிகர்கள். என்றாலும் ஃபகத் ஃபாசில் என்கிற அசலான கலைஞனே படம் முழுவதும் வியாபித்திருக்கிறார்.

மனச்சிதைவு நோயில் அல்லாடும் நாட்கள், மதபோதகராக பயிற்சி பெறும் நாட்கள், ஜோஸ்வா கால்டனாக மாறிய பின் மதக் கூட்டங்களில் பிரசங்கிக்கும் நாட்கள், வறுமையை உதறியெழுந்த உலகப் புகழ் போதகராக உலகம் சுற்றும் நாட்கள் எனக் கதாபாத்திரத்தின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் உடல்மொழியிலும் முக பாவங்களிலும் ஃபகத் ஃபாசில் வெளிப்படுத்திக்கொண்டு வரும்போது அவரை மகா கலைஞன் என்றே சொல்லவேண்டியிருக்கிறது.

இரண்டாம் பாதியில் வெகுஜன சினிமாவின் ‘சினிமாடிக்’ தருணங்களுக்கு படம் நகர்ந்தாலும் மதத்தின் பெயரால் நடக்கும் வியாபாரத்தின் முகத்தை துணிவாக திரைவிலக்கிக் காட்டியதில் ‘நிலை மறந்தவன்’ கெத்து காட்டுகிறான்.

தெய்வ வியாபாரியின் கதையும் திணறலும் - ‘ட்ரான்ஸ்’ படம் எப்படி?

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அன்வர் ரஷித் இயக்கியிருக்கும் படம், வெற்றி இயக்குநர் அமல் நீரத் ஒளிப்பதிவு, ஃப்கத் பாசில் - நஸ்ரியா தம்பதி இணைந்திருக்கும் படம் என அறிவித்த நாள் முதலே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ‘டிரான்ஸ்’.

இந்தியாவின் தென் கோடி முனையான கன்னியாகுமரியில் தொடங்கி, இந்தப் படம் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் வரை நீள்கிறது. ட்ரான்ஸ் என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் ‘மெய்மறதி நிலை’ எனலாம். இந்தப் படத்தின் பொருளும் அதுதான். மெய் மறக்கவைக்கும் பரம்பொருளின் பெயரால் நடக்கும் கூத்துகளைச் சொல்ல முயன்றிருக்கும் படம். அதாவது தெய்வத்தின் பெயரால் நடக்கும் வியாபாரம்.

நஸ்ரியா, செளபீன் ஷகீர், ஸ்ரீநாத் பாசி, விநாயகன், கெளதம் வாசுதேவன், செம்பன் வினோத், திலீஷ் போத்தன் எனப் பலர் இந்தப் படத்தில் இருந்தாலும் ஃபகத் என்னும் கலைஞனே படம் முழுவதும் வியாபித்து நிற்கிறார். இதற்கு அடுத்தபடியாக திலீஷ் போத்தனின் பங்களிப்பு பலம் சேர்க்கிறது. அன்வர் ரஷீத், அமல் நீரத், ரசூல் பூக்குட்டி எனச் சிறந்த கலைஞர்களின் கூட்டணி, படத்தைத் தொழில்நுட்பரீதியில் நேர்த்தியாக்கியிருக்கிறது.

தெய்வத்தின் பெயரால் நடக்கும் வியாபாரத்தைச் சொல்ல, மனநிலை சிதைந்த குடும்பத்தின் வாரிசை நாயகனாகக் கொண்டுள்ளது திரைக்கதை. அவனது குடும்ப உறுப்பினர்கள் இந்தச் சிதைவால் மரித்தும் போகிறார்கள். அவன், தன்னம்பிக்கை அளிக்கும் வியாபாரத்தைப் பகுதி நேரமாகச் செய்துவருபவன்.

தன்னம்பிக்கை அளிக்கும் வியாபாரத்துக்கும் மதபோதனை வியாபாரத்துக்கும் உள்ள ஒற்றுமையைப் படம் சித்தரிக்கிறது. மத நிறுவனங்களுக்குப் பின்னால் இயங்கும் கார்ப்பரேட் முகங்களைத் திரை விலக்கிக் காட்டுகிறது. ‘ரியாலிட்டி ஷோக்கள்’ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கட்டுக்கோப்பான திட்டத்துடன் நடத்தப்படுவதைப் போல், மத போதனை வகுப்புகளின் அற்புதங்களும் அப்படியே இந்தப் படத்தில் நடக்கின்றன.

படத்தின் நாயகனான ஃபாசிலின் மனச் சிதைவைத் துண்டு துண்டு காட்சிகள் மூலம் தெளிவாகக் காட்சிப்படுத்தியுள்ளனர். சீலிங் ஃபேன், வண்ண மீன்கள், மாத்திரைகள் என அந்தக் காட்சிகள் திரும்பத் திரும்ப மாண்டேஜாக வருகின்றன; அவை, அந்த மனத்தின் கசகசப்பைப் பார்வையாளர்களையும் உணரவைகின்றன. இதேபோல் சிதைவுற்ற லட்சபோலட்சம் மனங்களையும் ஒருசேரக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். படத்தில் உள்ள இந்த மதபோதனைக் காட்சிகளும் ஃபகத்தின் பிரசங்கமும் பார்வையாளர்களையும் மனப் பிறழ்வுக்கு உள்ளாக்கக் கூடியவையாக இருக்கின்றன.

கன்னியாகுமரியில் நடக்கும் முதல் பகுதியில் ஃபகத்தின் அன்றாடம் தெளிவாகச் சித்தரிக்கப்படவில்லை. மக்களை வசீகரிக்க மதபோதகர் சொல்லும் திருப்பம் மிக்க கதைகள், பல நூறு முறை கேட்ட முல்லா கதைகள்போல் இருக்கின்றன. மத நிறுவனங்கள், அதற்குப் பின்னால் உள்ள கார்ப்பரேட் எனச் சுவாரசியம் அளிக்கும் விவரிப்பு, அதைத் தாண்டிச் செல்லவில்லை; படம் திணறியிருக்கிறது.

நஸ்ரியாவின் எஸ்தர் கதாபாத்திரம் துருத்தல். ஆனால், அவருக்கெனப் பின்னணிக் காட்சிகளும் இருக்கின்றன. அது தனிப் படம். மத போதகரின் வளர்ச்சி ‘அருணாசலம்’ போல் வேகவேகமாக நடக்கிறது. பின்னணிப் பாடல் இல்லை என்பது மட்டும்தான் குறை. படம் உருவாக்கும் கதாபாத்திரங்களின் தன்மையைப் படமே பல இடங்களில் மீறியிருக்கிறது.

ஃபகத் மனப்பிறழ்வைச் சித்தரிப்பதிலேயே படம் பல இடங்களில் குழம்பிவிடுகிறது. படத்தின் முடிவு யதார்த்தத்துக்குச் சிறிதும் முகம் கொடுக்கவில்லை. படத்தில் பிரதானமாகச் சொல்லப்பட்டுள்ள மனப் பிறழ்வுக்கு இந்தத் திரைக்கதையும் ஆளாகியிருக்கிறது.




 


No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா