`வாஞ்சிநாதனுக்கு நினைவுச்சின்னம் கூட இல்லை; ஆஷ்துரை மண்டபம் சீரமைப்பா?” - சமூக ஆர்வலர்கள் கேள்வி
வாஞ்சிநாதனுக்கு மணியாச்சியில் நினைவு மண்டபமோ, சின்னமோ நிறுவப்படவில்லை. ஆனால், வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய ஆஷ்துரைக்கு தூத்துக்குடியில் நிறுவப்பட்ட நினைவு மண்டபத்தை மாநகராட்சி நிர்வாகம் புதுப்பிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கிலேயர் நம்மை ஆண்ட போது, ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் கலெக்டராகவும், நீதிபதியாகவும் இருந்தவர் ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் டிஸ்கவர் ஆஷ். இவரை ஆஷ்துரை என்றே அழைத்தனர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தார். அப்பாவி மக்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைகளைக் கையாண்டார். சுதந்திரத்திற்காக போராடிய வ.உ.சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்க காரணமானவர். வ.உ.சி சிறையில் அடைக்கப்பட்டதால் அன்றைய இளைஞராக இருந்த செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன் ஆவேசமடைந்தார்.
ஆங்கிலேயர் நம்மை ஆண்ட போது, ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் கலெக்டராகவும், நீதிபதியாகவும் இருந்தவர் ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் டிஸ்கவர் ஆஷ். இவரை ஆஷ்துரை என்றே அழைத்தனர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தார். அப்பாவி மக்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைகளைக் கையாண்டார். சுதந்திரத்திற்காக போராடிய வ.உ.சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்க காரணமானவர். வ.உ.சி சிறையில் அடைக்கப்பட்டதால் அன்றைய இளைஞராக இருந்த செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன் ஆவேசமடைந்தார்.
கடந்த1911-ம் ஆண்டு ஜூன் 17-ம் தேதி காலை 10.30 மணிக்கு தனது மனைவியுடன் சுற்றுலாவிற்காக கொடைக்கானல் செல்வதற்காக ரயிலில் கிளம்பினார் ஆஷ்துரை. மணியாச்சி ரயில் நிலையத்தில் ரயில் நின்றது. முதல் வகுப்புப் பெட்டியிலிருந்த ஆஷ்துரையை அங்கே மறைந்திருந்த வாஞ்சிநாதன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். தன்னை ஆங்கிலேய போலீஸ் சுற்றி வளைந்ததும் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு சுதந்திரப் போராட்டம் தீவிடமடைந்தது.
நாட்டுக்காக உயர்நீத்த வாஞ்சிநாதனுக்கு இன்னும் மணியாச்சி ரயில் நிலையம் அருகே நினைவு மண்டபமோ, நினைவுச் சின்னமோ தற்போது வரை அமைக்கப்படவில்லை. பொதுமக்களின் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு மணியாச்சி ரயில் நிலையத்திற்கு ’வாஞ்சி மணியாச்சி’ என பெயரிடப்பட்டது. ஆனால், ஆங்கிலேயர் ஆஷ் துரைக்கு பழையதுறைமுகம் எதிர்புறம் 16 ஸ்தூபிகள் 8 தூண்டுகளுடன் எண்கோன அமைப்பில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது. நாளடைவில் புல்புதர் சூழ்ந்த மண்டபமாக காட்சியளித்தது. இடைப்பட்ட காலத்தில் தனியார் கல்லூரி நிர்வாகம் இந்த இடத்தை பராமரித்து வந்தது. தற்போது ஆஷ்துரை நினைவிடத்தை தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் பல லட்சம் செலவு செய்து புதுப்பித்து வருகிறது.
இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. சமூக வலைதளங்களில் இதுகுறித்து கண்டனத்தைப் பதிவு செய்துள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த தங்கமாரியப்பனிடம் பேசினோம், “எங்கள் வ.உ.சியை செக்கிழுக்க வைப்பதா என வெகுண்டெழுந்த மக்களை காக்கைக்குருவி போல சுட்டுத்தள்ள உத்தரவிட்ட ஆஷ் துரைக்கு மரணத்தின் வலி என்ன என்பதை உணர்த்த வாஞ்சிநாதன் கொடுத்த பரிசுதான் துப்பாக்கிகுண்டு.
சுதந்திரப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஈடுபடத் தூண்டியதே வாஞ்சிநாதனின் வீரம்தான். ஆஷ் துரையின் உடலை அரசு மரியாதையுடன் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள இங்கிலீஷ் சர்ச் வளாகத்தில் அடக்கம் செய்தனர். வாஞ்சிநாதன் தன்னைத்தானே சுட்டுகொண்ட மணியாச்சி ரயில் நிலையத்தில் அவரது நினைவாக உருவப்படமோ, சிலையோ, மணி மண்டபமோ எதுவுமில்லை. ஆனால், வ.உ.சிதம்பரனார் பெயரில் உள்ள சாலையில் உள்ள ஆஷ்துரையின் நினைவு மண்டபத்தை தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் தற்போது புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
சுதந்திரத்திற்கு எதிராகப் போராடிய மக்கள் மீது அடக்குமுறையை மேற்கொண்ட ஆஷ்துரையின் நினைவு மண்டபத்தினை புனரமைப்பது தற்போது அவசியமா? மக்களின் வரிப்பணத்தில் தேவையா? தமிழரின் வீரத்தைப் போற்றுவோம் என வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் தி.மு.க அரசின் திராவிட மாடல் இதுதானா? 75வது சுதந்திர திருநாளை கொண்டாட நாடே தயாராகி வருகிறது.
அந்த வகையில் சுதந்திர போராட்டத்தோடு தொடர்புடைய ரயில் ரயில்நிலையங்களில் 5 நாள்கள் விழா நடந்த தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதில் மதுரை கோட்டத்தில் உள்ள வாஞ்சி மணியாச்சி ரயில்நிலையத்தில் விழா நடந்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியில் ஆஷ்துரை நினைவு மண்டபம் சீரமைக்கப்படுகிறது இது வேதனையாக இல்லையா? ஆஷ் நினைவு மண்டப பராமரிப்புப் பணியை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்த வேண்டும்” என்றார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகனிடம் பேசினோம், ”மாநகராட்சிப் பகுதியில் உள்ள தொன்மையான கட்டடத்தை பழுது பார்த்து புனரமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதற்காக சில இடங்களைத் தேர்வு செய்தோம். அதன் அடிப்படையில்தான் ஆஷ் துரை நினைவிடத்தை பராமரிக்க முடிவு செய்தோம். அது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடம். அதனை ஆஷ் துரையின் நினைவு மண்டபமாக மட்டும் பார்க்கவில்லை. நிழலுக்காக அமரும் இடமாகவும், போட்டித் தேர்விற்காக அமர்ந்து படிக்கும் இடமாகவும் உள்ளது. ஆஷ் நினைவு மண்டப பராமரிப்பு குறித்து சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் கருத்தையும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறேன்” என்றார்.
No comments:
Post a Comment