Monday, July 18, 2022

"முதல் குரங்கு பேசிய தமிழ்"...! மு.க.ஸ்டாலின்

 "முதல் குரங்கு பேசிய தமிழ்"...! Murali Seetharaman

உலகில் பேச ஆரம்பிக்கப்பட்ட மூத்த மொழி - முதல் மொழியே தமிழ்தான் என்ற கருத்தை வலியுறுத்த வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திருவாய் மலர்ந்தருளி உள்ளார்!
"உலகின் முதல் குரங்கே தமிழ்தான் பேசியது!"- அதாவது குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியில் பேசத் தொடங்கியபோது அந்த முதல் குரங்கே தமிழ்தான் பேசியது!

இந்த "முதல் குரங்கு" வசனம் எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதே என்று யோசித்தேன்!
"தமிழ் - திமுக - கம்யூனிஸ்ட்"- என்று ஒரு புத்தகம். வழக்கறிஞர் ச.செந்தில்நாதன் எழுதியது! அவர் ஒரு கம்யூனிஸ்ட். அந்தப் புத்தகத்தின் நோக்கமே திமுகவின் கண்மூடித்தனமான தமிழ் வெறியையும், சமஸ்கிருத எதிர்ப்பையும் விமர்சிப்பதுதான்!
ஆரம்பத்திலேயே ச.செந்தில்நாதன் புத்தகத்தின் நோக்கம் பற்றி சொல்லிவிடுகிறார்! "தமிழ் துரோகிகள் - தமிழ்ப் பகைவர்கள் - தமிழ் உணர்ச்சி அற்றவர்கள்! திமுகவினர்... கம்யூனிஸ்டுகளின் மீது கோபம் வரும்போதெல்லாம் இந்தப் பாணியைக் கையாண்டு இருக்கிறார்கள்!
வசை மொழிகளையும் வெத்து வேட்டுகளையும் தவிர்த்து - கம்யூனிஸ்டுகள் மொழி, கலை, இலக்கிய விஷயங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை திமுகவினர் தெரிந்து கொள்ள வேண்டும்!"
"தங்களின் கலை இலக்கியக் கண்ணோட்டங்களையும் அவர்கள் சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும். அப்படி சுயவிமர்சனம் செய்து தங்கள் கண்ணோட்டம் தவறு என்று உணர்ந்து சரியான பாதையை அவர்கள் தேர்ந்தெடுத்தால்..."
அடேயப்பா! திமுகவினர் மீது செந்தில்நாதனுக்கு அவ்வளவு நம்பிக்கை!
"...திமுகவினரின் சிந்தனையை இந்தப் பிரச்னைகளின் மீது திருப்பவும், அவர்களோடு விவாதிக்கவும் உதவுவதே நமது நோக்கமாகும்!"
ஆக, கம்யூனிஸ்டு செந்தில்நாதன் தமது நோக்கத்தைத் தெளிவுபடுத்திவிட்டார்!
அதாவது கண்மூடித்தனமாக திமுகவினர் கொண்டுள்ள தமிழ் மொழி வெறியை அகற்றுவதன் அவசியத்தைக் கூறிவிடுகிறார்!
பிறகு பின்வரும் பக்கங்களில் தமிழ் குறித்து திமுக பரப்பிய மாயை - திராவிடம் - தமிழ் இப்படிக் கிழித்தெறிகிறார் செந்தில்நாதன்!
சிலவற்றை மேற்கோள் காட்டுகிறேன்.
இனி செந்தில் நாதன் பேசுகிறார்:-
"திராவிடம் என்ற முகமூடியைக் கிழித்துக் கொண்டு தமிழ் என்ற உருவம் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது..."
"மொழி வழி பிரிந்து இனவழி கூடுவோம் என்று அண்ணாதுரை சாமர்த்தியமாக சொல்லிக் கொண்டார் - ஆனால் கன்னடரோ , தெலுங்கரோ, மொழிவழி பிரிந்து - திராவிட இனவழி கூடாமல் இந்திய நாட்டு வழி கூடிக் கொண்டார்கள்!"
"இந்தி வெறியர்கள் இந்திதான் இந்தியா என்று காண்பதுபோல் - இந்த திராவிடர்கள் தமிழ்தான் திராவிடம் என்று கண்டார்கள்! தமிழில் இருந்துதான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை பிரிந்தது என்று சொன்னார்கள்! இதை இதர திராவிடர்கள் ஒப்புக் கொண்டார்களா?"
"மொழி உணர்வும் ஆர்வமும் வெறியாக மாறாமல் இருக்க சில உண்மைகளை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். போலித்தனமான ஆதாரமற்ற செய்திகளால் தமிழுக்குப் பெருமை சேர்ப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்!"
"தமிழின் தொன்மையிலும் - கவிதை வளத்திலும் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்! ஆனால் மொழி, இனவெறிக் கண்ணோட்டங்களுக்கு இல்லாதவற்றையும் சேர்த்துக் கால்கோள் நடத்தக் கூடாது!"
"தமிழிலிருந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவை பிரிந்தது உண்மைதானா? ...ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழி தோன்றுவது சாத்தியம்தானா? இது ஆய்வுக்குரிய பிரச்னை"
"தமிழிலிருந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு போன்ற மொழிகள் தோன்றின என்பதைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வது போல் - இதர தென்னக மொழி பேசுவோர் ஏற்றுக்கொள்வதில்லை!"
"தமிழிலிருந்துதான் இதர தென்னக மொழிகள் தோன்றின என்ற வாதத்தை முன்வைக்கும் போதே - மற்றவர்கள் திராவிட நாட்டை நிராகரித்து விடுவார்கள்! அதனால்தான் திராவிட நாடு கோரிக்கை பிறக்கும் போதே சப்பாணியாகி விடுகிறது!"
செந்தில்நாதன் மேலும் திமுகவினருக்கு பாடம் நடத்துகிறார்!
"தமிழும் - வடமொழியும் வளர்ச்சி பெற்ற மொழிகளாக இருந்த காலத்தில் தெலுங்கிலும், மலையாளத்திலும், கன்னடத்திலும் பல வடமொழிச் சொற்களும் - தமிழ்ச் சொற்களும் கலந்து இருக்கலாம் - இருக்கின்றன"
"ஆனால் இரண்டின் சேர்க்கையிலும் குழந்தை பிறப்பது போல் மூன்றாவது மொழி பிறக்காது!"
"திராவிடம் என்ற சொல் பழைய தமிழ் இலக்கியங்களில் இருக்கிறதா? - என்று துருவித் துருவித் தேடினாலும் கிடைக்காது! அப்படி ஒரு சொல்லை பழங்காலத்திலும் சரி, இடைக்காலத்திலும் சரி - எந்தத் தமிழ்க் கவிஞனும் கையாளவில்லை!"
"தமிழ் மொழியில் இருந்துதான் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு முதலிய மொழிகள் வட மொழி கலந்ததால் பிரிந்து போயின என்ற கூற்றும் இடைக்கால இலக்கியங்களில் இல்லை!"
இப்படி எல்லாம் திமுகவினருக்கு "மொழிப்பாடம்" நடத்திய செந்தில்நாதன் கூறுகிறார்!
அதாவது திமுகவினர் பரப்பிய அதீதமான தமிழ் வெறிக்கு - ஒரு விமர்சனமாகக் கூறுகிறார்:-
இதற்குப் பிறகுதான் இன்று நமது முதல்வர் குறிப்பிட்ட "குரங்கு" வருகிறது!
"குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பது டார்வின் தத்துவம்! இந்தக் குரங்கின் தத்துவத்தைக் கூட சிலர் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை - 'குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்றால் - முதல் குரங்கு தமிழ்க் குரங்கு' என்று இவர்கள் சொல்வார்கள் என்று புதுமைப்பித்தன் வேடிக்கையாகச் சொல்வதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்!"
("தமிழ் - திமுக - கம்யூனிஸ்டுகள்"- சிகரம்.ச.செந்தில்நாதன், சிகரம் வெளியீடு, முதல் பதிப்பு 2002, பக்கம் 29)
ஆக... ஆக...
எழுத்தாளர் புதுமைப் பித்தன் - "முதல் குரங்கு தமிழ்க் குரங்கு என்று இவர்கள் சொல்வார்கள்"- என்று வேடிக்கையாகச் சொன்னதை....
சிகரம் ச.செந்தில்நாதன் பாஷையில் சொல்வதானால் - "போலித்தனமான ஆதாரமற்ற செய்திகளால் தமிழுக்குப் பெருமை சேர்க்கும்"- திமுகவினர் என்றாரே அதுபோல்...
மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டு நமது முதல்வர் அவர்கள் - "முதல் குரங்கே தமிழ்தான் பேசியது"- என்று கூறியிருப்பது நகைப்புக்கே இடம் கொடுக்கிறது!


No comments:

Post a Comment