Monday, July 25, 2022

தமிழகத்தில் முஸ்லிம் வஹாபிய மதவெறி அடிப்படைவாதம் வளர்ச்சி எதிரக்கும் மாற்று ஜமாஅத்

தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் வஹாபிகள்!:பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்; ஏர்வாடியில் எதிர்ப்பு 


'வஹாபி'யர் ஆதிக்கம் தமிழகத்தில் சில இடங்களில் அங்குமிங்குமாக தலை துாக்கியிருப்பினும், முதலில் அதற்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பது திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் இருக்கும் ஏர்வாடியில் தான்.

500 ஆண்டுகள் பழமை


இங்கு, ஆறு சுன்னத் ஜமாத் பள்ளி வாசல்கள் இருப்பினும், 'அகமது மல்லிஹாமாள் ஜும்மா மஸ்ஜித் மேலமுஹல்லம் சுன்னத் - வல் - ஜமாத்' பள்ளிவாசல் ஏறத்தாழ, 500 ஆண்டுகள் பழமையானது. சமீபத்தில் அதன் நிர்வாகிகள், திருநெல்வேலி கலெக்டரிடம் அளித்துள்ள புகாரில், அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளது, மத்திய- மாநில உளவுத் துறையினரை உஷார் படுத்தியிருக்கிறது.
அந்த புகாரில், 'தமிழக வக்பு வாரியத்தின் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு எங்கள் பள்ளிவாசலை, பல்லாண்டு காலமாக திறம்பட நடத்தி வருகிறோம். 'தலைவர், செயலர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள், பாரம்பரிய முறைப்படி, நியமனம் வாயிலாகவே பொறுப்புக்கு வருகின்றனர்; தேர்தல் நடத்தும் நடைமுறை கிடையாது. 'ஆனால், சமீபத்தில் சில நபர்கள், ஜமாத் நிர்வாகிகளான எங்கள் மீது அவதுாறு கிளப்பி நிர்வாகத்தை நடத்த விடாமல் இடையூறு செய்வதுடன், நிர்வாக கமிட்டியை மாற்றவும் முயற்சிக்கின்றனர்.

'அவர்கள், 'வஹாபி' கொள்கை உடையவர்கள்' என, குறிப்பிட்டுள்ளனர். புகாரில் ஏழு நபர்களின் பெயர் விபரங்கள் இடம் பெற்றுள்ளன.இவ்விவகாரம், முஸ்லிம்களின் இரு தரப்புக்கிடையே நடக்கும் சாதாரண மோதலாகவே, ஆரம்பத்தில் கருதியது மாவட்ட நிர்வாகம். ஆனால், உளவுப் போலீசாரோ உஷாரடைந்து, 'வஹாபி'யர்களின் பின்னணியை தோண்டத் துவங்கினர். அப்போது தான், பள்ளி வாசலை கைப்பற்றும்நோக்கில் செயல்படும் நபர்களின் அதிர்ச்சி பின்னணி அம்பலமானது.

வெளிநாட்டு சக்திகள்


'வஹாபி'கள் குறித்து பள்ளிவாசல் நிர்வாகிகளில் ஒருவர் கூறியதாவது:நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பதை போன்றே, இஸ்லாத்துக்கும் இரு பக்கங்கள் உண்டு. ஒன்று நுபுவத் எனப்படும் நபித்துவம்; இன்னொன்று விலாயத் எனப்படும் வலித்துவம். நுபுவத் - சன்மார்க்கம், விலாயத் - ஞான மார்க்கம். இவ்விரு பக்கங்களும் சரியாக இருப்பதே, இஸ்லாத்துக்கு பொருத்தமாகும்.

வஹாபிகள், நுபுவத்தை மட்டும் ஏற்றுக் கொள்கின்றனர்; விலாயத்தை மறுக்கின்றனர். நுபுவத் உடல் என்றால், விலாயத் உயிர்.'வஹாபி' கொள்கை, உலகில் சவுதி அரேபியாவில் மட்டுமே உள்ளது. பிற நாடுகளுக்கு அதை பரப்ப முயற்சித்தும் முடியவில்லை; காரணம், முஸ்லிம்களில் பலரும் அதை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், இக்கொள்கையை தமிழகத்துக்குள் நுழைத்து, இங்கு பரப்ப சிலர் முயற்சிக்கின்றனர்; அமைப்பு ரீதியாக செயல்படுகின்றனர்.
அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து நிதி உதவிகள் வருகின்றன. அதைக் கொண்டு அந்த கொள்கையை இங்கு பரப்ப ஏதுவாக, முதற்கட்டமாக, தமிழகத்தில் பல இடங்களில் 'சுன்னத் ஜமாத்' பள்ளிவாசல்களை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். சில இடங்களில் முயற்சிகள் நடந்து முறியடிக்கப்பட்டிருக்கின்றன. சில இடங்களில், 'வஹாபி'கள் எண்ணம் ஈடேறியிருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

மத நல்லிணக்கத்துக்கு ஆபத்து


ஓய்வு பெற்ற உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் காலங்காலமாக ஹிந்து - முஸ்லிம் இடையேயான நல்லுறவு, ஒற்றுமை மிகச்சிறப்பாகவே பேணப்பட்டு வருகிறது. இதற்கான சாட்சியாக ஹிந்துக்கள் நடத்தும் விழாவில் முஸ்லிம்களும், முஸ்லிம்கள் நடத்தும் விழாக்களில் ஹிந்துக்களும் பங்கேற்று, வழிபாட்டிலும் ஈடுபடும் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது.
உதாரணமாக, ராமநாதபுரம், ஏர்வாடி சந்தனக்கூடு விழாவைச் சொல்லலாம். அங்குள்ள தர்காவில் நடக்கும் விழாவிற்கு, தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த ஹிந்துக்களும், முஸ்லிம்களும் மத வேறுபாடின்றி பல்லாயிரக்கணக்கில் பங்கேற்கின்றனர்.இதுபோன்ற மதநல்லிணக்கம் பேணும் ஒற்றுமை விழாக்கள், சடங்குகள், தர்கா வழிபாடுகள், கயிறு வழங்குதல் போன்ற மாந்திரீகங்கள் இஸ்லாத்திற்கு முற்றிலும் விரோதமானவை எனக்கூறும், 'வஹாபி'கள், அவற்றை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்கின்றனர்.
இந்திய கலாசாரத்தைத் தழுவிய பெருவாரியான முஸ்லிம்களின் காலங்காலமான இறைவழிபாட்டு முறைகளை விட்டொழிக்க வலியுறுத்தும் இவர்களின் பிரசாரத்தை, இங்குள்ள முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வதில்லை.அதனால், வலுக்கட்டாயமாக தங்களின் கொள்கையை பரப்ப முயற்சிக்கின்றனர். அதன் முதற்கட்ட முயற்சியாக, பள்ளிவாசல்களை கைப்பற்றத் துடிக்கின்றனர். திருநெல்வேலி, ஏர்வாடியில் நடந்த முயற்சியை போன்றே, துாத்துக்குடியிலும் ஒரு முயற்சி நடந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

விழிக்குமா அரசு


திருநெல்வேலி, ஏர்வாடி, சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் செயலர் தாகிர், பொருளாளர் நசீர்மொய்தீன் ஆகியோர் கூறுகையில், 'எங்கள் பள்ளிவாசலின் புராதன பெயரான, 'அவூது முதலியம்மாள்...' என்ற பெயரில், முறைகேடாக டிரஸ்ட் துவக்கி, நிர்வாகிகளை அவர்களே நியமித்து, வங்கி கணக்கும் துவக்கியிருக்கின்றனர்.'மக்களிடம் நிதி வசூலித்துள்ளனர்.
வக்பு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட எங்கள் ஜமாத் நிர்வாகத்தை நடத்துவதற்கும், பணியாளர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்குமே நாங்கள் போதிய நிதியின்றி தவிக்கிறோம். 'எனவே, முறைகேடில்ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்கள் வசூலித்த நிதியை மீட்டுத் தரக் கோரி கலெக்டர், எஸ்.பி.,யிடம் முறையிட்டு உள்ளோம்' என்றனர்.
வெளிநாட்டு ஆதரவு சக்திகளை தமிழகத்தில் காலுான்ற அனுமதிக்கும் பட்சத்தில் மத நல்லிணக்கமும், உள்நாட்டு பாதுகாப்பும் கேள்விக் குரியாகிவிடும் எனும் அச்சமும், எதிர்ப்புக்குரலும் முஸ்லிம்கள் மத்தியிலிருந்தே எழுந்திருக்கிறது; என்ன செய்யப் போகின்றன மத்திய - மாநில அரசுகள்?

வீடியோ பேட்டி


திருநெல்வேலியிலுள்ள ஏர்வாடி, ஜூம்மா மஸ்ஜித் மேலமுகல்லம் சுன்னத் - வல் - ஜமாத் நிர்வாகிகள் தினமலர் நாளிதழுக்கு வீடியோ பேட்டியும் அளித்துள்ளனர்.

இன்னொரு விழாவுக்கும் மிரட்டல்!

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி, '6வது தெரு ஹசைன் ஹூசைன் முஹர்ரம் சாவடி' நிர்வாகக்குழு சார்பில், ஏர்வாடி போலீஸ் ஸ்டேஷனில் அளித்துள்ள மனுவில்,மொகரம் விழாவை முன்னிட்டு பிறைகொடி எடுத்து ஊர்வலம் செல்லவும், சந்தனக்கூடு நிகழ்ச்சி நடத்தவும் அனுமதி கோரி உள்ளனர்.

இது ஆண்டாண்டு காலமாக வழக்கமாக நடத்தப்பட்டு வந்த விழா தான் என்ற போதிலும், 'வஹாபி'களின் எதிர்ப்பு, மிரட்டல் காரணமாக, பல ஆண்டுகளாக பிரச்னையில் உள்ளது. அதே போன்று, 'குதிரை பாஞ்சான்' எனும் பாரம்பரிய வழிபாட்டு முறையும் தடைபட்டு நிற்பதாக, விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

மணிப்பூர் கலவரத்துக்கு காரணம் இட ஒதுக்கீடு இல்லை… போதைப் பொருள் மாஃபியாக்கள்தான்: அதிர்ச்சி தகவல்!

மணிப்பூர் கலவரத்துக்கு காரணம் இட ஒதுக்கீடு இல்லை… போதைப் பொருள் மாஃபியாக்கள்தான்: அதிர்ச்சி தகவல்! https://www.aljazeera.com/economy/2024/4...