Sunday, July 3, 2022

ராசிமணல் அணை

 1961ல் காமராஜர் அடிக்கல் நாட்டிய அணை ராசிமணல். இந்த இடத்தில் கர்நாடக அணையில் இருந்து வரும் காவிரி நீரோடு நீலகிரி மலைத்தொடர் நீர் மற்றும் தொட்டல்லா எனும் காட்டாறு என மூன்றும் இணையும் இடம்

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கல்லுப்பாலம், பாலதொட்டனப்பள்ளி, குந்துக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில், கனமழை பெய்யும் போது, காட்டாற்று வெள்ளம் உருவாகுகிறது. அதேபோல், அஞ்செட்டி வனப்பகுதியில் உள்ள யானை விழுந்த பள்ளம் என்ற ஆறு மற்றும் மேலும் சில கிளை ஆறுகள் அனைத்தும், அஞ்செட்டி அருகே ஒன்றாக சங்கமித்து, தொட்டல்லா என்ற சிற்றாறாக உதயமாகி, தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள, ராசிமணல் அருகே, காவிரி ஆற்றில் கலக்கின்றன.



https://www.youtube.com/watch?app=desktop&v=SNtuAUtooHY&feature=youtu.be 


தொட்டால்லா அணை கட்ட போராடுவோம்

ராசிமணல் அணை சாத்தியமே

மேகேதாட்டுவிலிருந்து ஒகேனக்கல் வரை சுமார் 60 கிமீ தொலைவு காவிரியின் இடது கரை முழுமையும் தமிழக எல்லையாகவும், கிருஷ்ணகிரி மாவட்ட வனத் துறைக் கட்டுப்பாட்டிலும் உள்ளது. வலது கரை முழுமையும் கர்நாடக மாநிலத்துக்குச் சொந்தமானதாக உள்ளது. ஒகேனக்கல் முதல் மேகேதாட்டு வரை தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதைப் பாரம்பரியமாகப் பின்பற்றி வருகின்றனர். வலது கரை முழுவதும் கர்நாடகாவுக்குச் சொந்தம் என்பதால், மின்சார உற்பத்தியை கர்நாடகமே செய்துகொள்ளலாம்.

தமிழக எல்லைப் பகுதியில் ராசிமணல் அணை கட்டுமானப் பணி துவக்கி முடிக்கப்படுமேயானால், சுமார் 50 முதல் 100 டிஎம்சி வரை தண்ணீர் தேக்க முடியும். மேல் நோக்கி 42 கிமீ மேகேதாட்டு வரையிலும், வடக்கே 25 கிமீ தூரம் அஞ்செட்டி வரை இரு பிரிவுகளாகத் தண்ணீர் சேமிப்புப் பகுதிகளாகத் தேக்கிவைக்க முடியும். மேட்டூர் அணையில் அதன் முழுக் கொள்ளளவான 120 அடி தண்ணீரைத் தேக்கிவைக்கும்போது ஒகேனக்கல் அருவியைக் கடந்து நீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. எனவே, அதற்கு மேல் பகுதியில் 18 கிமீ தொலைவில் இருபுறமும் உயர்ந்த மலைக்குன்று பகுதியாக ராசிமணல் உள்ளதால், குறைந்த செலவில் விரைவாக அணையைக் கட்டி தண்ணீரைத் தேக்கிவைக்க முடியும். மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறையும்போது ராசிமணலிலிருந்து தண்ணீரைத் திறந்து மேட்டூர் அணையில் நிரப்பிக்கொள்ள முடியும்.

ராசிமணல் அணையால் காவிரிப் படுகையின் குடிநீர்த் தேவையையும், குறுவை, சம்பா சாகுபடிகளையும் உறுதிசெய்ய முடியும். நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்திப் பாதுகாக்க முடியும். இதைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு உரிய அனுமதியும், தேவையான நிதி ஒதுக்கீடும் செய்திட முன்வர வேண்டும். இத்திட்டம் குறித்த அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு விரைவில் முன்மொழிந்து அனுமதி பெற வேண்டும்.





காமராஜரின் நிறைவேறாத கனவுகளில் ஒன்றான ராசிமணல் தொட்டல்லா ஆறு அணைகட்டு திட்டம்

2020-07-22@ 13:37:37

பென்னாகரம்: கர்நாடகத்திடம் காவிரி நீருக்கு கையேந்தி நிற்காத வகையில், காமராஜரின் கனவுகளில் ஒன்றான ராசிமணல் தொட்டல்லா ஆறு அணைக்கட்டு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளது. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு, தமிழகம் தனது நீர்வளத்தை பெருக்குவதற்கு உரிய பாசனத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்த காமராஜர், அதற்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அதன் பயனாக கீழ்பவானி திட்டம், மணிமுத்தாறு திட்டம், மேட்டூர் கால்வாய் திட்டம், ஆரணியாறு திட்டம், அமராவதி திட்டம், வைகைதிட்டம், சாத்தனூர் திட்டம், கிருஷ்ணகிரி திட்டம், காவிரி கழிமுக வடிகால் திட்டம் போன்றவற்றை உருவாக்கினார். இதில் கிருஷ்ணகிரி திட்டத்தில் ஒரு பகுதியாக உருவானது தான், ராசிமணல் தொட்டல்லா ஆறு அணைக்கட்டு திட்டம். ஆனால் இந்த திட்டத்தை அவருக்கு பிறகு, யாரும் பெரிய அளவில் கண்டு கொள்ளாதது துரதிர்ஷ்டம் என்று, தமிழக விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் தமிழகம் மற்றும் கர்நாடகாவை இரு கரைகளாக கொண்டு காவிரியாறு பாய்ந்தோடுகிறது. அஞ்செட்டி மற்றும் தேன்கனிக்கோட்டையை சுற்றியுள்ள குந்துக்கோட்டை, பாலதோட்டனப்பள்ளி, சாலிவரம், ஈருசெட்டி, அருளாலம், அந்தேவனப்பள்ளி, கங்கதேவனப்பள்ளி பகுதிகளில் பருவமழையின் போது உற்பத்தியாகும் காட்டாறு மற்றும் ஏரிகளின் உபரிநீர் அஞ்செட்டி வனப்பகுதிகளில் சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்தோடுகிறது. தொட்டல்லா என்று அழைக்கப்படும் இந்த ஆறு, ஒகேனக்கல்லுக்கு முன்பாக 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராசிமணல் என்னுமிடத்தில் காவிரியாற்றில் கலக்கிறது. இங்கு காமராஜரின் கனவு நிறைவேறும் வகையில் அணை கட்டி முடிக்கப்பட்டால் சுமார் 50 முதல் அதிகபட்சமாக 100 டிஎம்சி வரை, தண்ணீர் தேக்க முடியும். இங்கு குறைந்த செலவில் விரைவாக அணையை கட்டி,தண்ணீரை தேக்கி வைக்க முடியும். மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறையும் போது, ராசிமணல் அணையில் இருந்து தண்ணீர் திறந்து நிரப்பிக் கொள்ளலாம். ராசிமணலில் அணை கட்டுவதன் மூலம் கர்நாடகத்திடம் நாம், நீரை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய அவலம் நேராது. காவிரிப்படுகையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதோடு, டெல்டாவின் குறுவை, சம்பா பயிர்சாகுபடிக்கும் உரிய நீராதாரம் கிடைக்கும். அதோடு அதலபாதாளத்தில் உள்ள நிலத்தடி நீர் மட்டமும் மேம்படும்.

அதேபோல் தொட்டல்லா கிளைஆறு, தமிழகத்தில் உற்பத்தியாகிறது. அதன் மூலம் பெருக்கெடுத்து வரும் காட்டாற்று வெள்ளத்தை மத்திய அரசின் நீர்வள ஆணையம், காவிரியில் இருந்து திறந்து விடுவதாகவே கணக்கில் எடுத்துக்கொள்கிறது. காவிரியில் வரும் நீர்வரத்தை கணக்கிடும் பிலுகுண்டுலுவுக்கு முன்பாக 10கிலோ மீட்டர் தூரத்தில் இணைவதால், இவ்வாறு கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர். கர்நாடகத்திடம் நீரை எதிர்பார்த்து நிற்பதை தவிர்க்கவும், காமராஜரின் கனவை நிறைவேற்றவும் ராசிமணல் தொட்டல்லா ஆறு அணைக்கட்டு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இதற்கு சட்டரீதியாக தமிழகத்திற்கு எந்த இடையூறும் இல்லை. கர்நாடகத்தின் சம்மதத்தை மட்டுமே பெற வேண்டும். எனவே மத்திய அரசு, இதனை கருத்தில் ெகாண்டு ராசிமணலில் அணை கட்ட, தமிழகத்திற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும். அதே போல் தமிழக அரசும், இத்திட்டம் குறித்த விரிவான அறிக்கையை காவிரி மேலாண்மை வாரியத்திடம் முன்மொழிந்து அனுமதி பெற வேண்டும். இவ்வாறு விவசாய சங்க நிர்வாகிகள் கூறினர்.

கூட்டுகுடிநீர் திட்டத்தை எளிதாக செயல்படுத்தலாம்
தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி சுற்றியுள்ள கிராமங்களுக்கு சுமார் 150 கிலோ மீட்டர் சுற்றிக் கொண்டு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீரை கொண்டு வரும் நிலையுள்ளது. ராசிமணல் தொட்டல்லா அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்றினால் காலவிரயமும், பணவிரயமும் மிச்சமாகும். கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடும் வராது. இஇந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மலைவாழ் மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்பது நீர்வள ஆர்வலர்களின் கருத்து.

முடங்கியதற்கு காரணம் அதிகாரிகளின் மெத்தனம்
மூத்தவிவசாயிகள் கூறுகையில்‘‘1961ல் முடிவு செய்யப்பட்டு, காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்ட ராசிமணல் அணை குறித்த கோரிக்கை மந்தகதியில் கிடக்கிறது. அதே நேரத்தில் 2016ல் கர்நாடக அரசு, கையிலெடுத்த மேகதாது அணைக்கான பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. கர்நாடகாவை போல், துரித நடவடிக்கையில் ஈடுபடாமல் தமிழக அரசு அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம்,’’என்றனர்

உள்ளூரில் 5ஆயிரம் ஏக்கர் பயன்பெறும்
தொட்டல்லா ஆற்றின் குறுக்கேயுள்ள ராசிமணலில் அஞ்செட்டி அக்கா-தங்கை ஏரியை மைய ப்படுத்தி அணை கட்டினால் அஞ்செட்டியில் உள்ள வண்ணாத்திப்பட்டி, சித்தாண்டபுரம், சீங்கோட்டை, தாம்சனப்பள்ளி, அ.புதூர், தேவன்பட்டி, பயில்காடு, பாண்டுரங்கன் தொட்டி, எர்முத்தனப்பள்ளி, மிலிதிக்கி, மாவனட்டி உள்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் என்கின்றனர் உள்ளூர் விவசாயிகள்.



No comments:

Post a Comment