Sunday, July 3, 2022

அர்ஜுனன் தவம் செய்து சிவபெருமானிடம் பாசுபத அஸ்திரம் பெற்றார்

 சிவபெருமானை நோக்கி தவம் செய்து, பாசுபதஅஸ்திரத்தை வரமாக பெற்று வர  கண்ணபிரான் தீர்மானித்து, அர்ச்சுனரை தவத்திற்காகப் பணிக்கிறார்.

அர்ஜுனன் -சிவன் போர் மகாபாரத காட்சி.. சாளுக்கிய‌ பட்டக்கல் கோவில் கர்நாடகா

பாசுபதாஸ்திரம் பெறுவதற்காக  சிவபெருமானை நோக்கி அர்ச்சுனன் தபசு செய்யும் தகவல் துரியோதனனுக்கு தெரிய வருகிறது. அவ்வாறு அர்ச்சுனன் பாசுபத அஸ்திரம் பெற்று விட்டால், அவனை போரில் வெல்வது கடினம் என்பதை உணர்ந்த துரியோதனன், முகாசுரன் என்ற அரக்கனை, அர்ச்சுனன் தவத்தை கலைப்பதற்காக அனுப்பி வைக்கிறான்.

படம் : கிராதார்ஜுநீயம் காட்சி  சிற்பம் . காஞ்சி ஸ்ரீ கைலாசநாதர்
 சிவன் பார்வதியுடன் வேடன் உருவில் நான்கு வேதங்களும் நாய்களாக மாறி இறைவன் பின்னே வர பன்றியை கொன்றார்.. 

 

அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பு எய்தான். பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து அர்ச்சுனர், வேடன் உருவில் உள்ள சிவபெருமான் இடையே சண்டை ஏற்படுகிறது. சொற்போரும் விற்போரும் நடந்தது. போரில் அர்ஜுனனின் வில் முறிந்தது.


வேடனை அர்ச்சுனன் தாக்கிய போது, அந்த வலியை தானும் உணர்ந்தார்.
அதன் மூலம், வேடன் உருவில் இருப்பது சிவபெருமான் என்பதை உணர்ந்து வருந்தினார். அர்ச்சுனனின் தவத்தை மெச்சிய சிவபெருமான், பாசுபத அஸ்திரம் வழங்கி அருள்புரிந்தார்.

சிவன் தன் திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். சிவனின் பாத தீட்சை பெற்று அன்னையின் கருணையால் இத்தல கிருபாகடாட்ச தீர்த்தத்தில் விழுகிறான். சிவன் பார்வதியுடன் காட்சி கொடுத்து பாசுபதாஸ்திரத்தை தந்தருளினார். 

 அர்ஜுனன் தவம்  திருவேட்களம் 

இறைவர் திருப்பெயர் : பாசுபதேஸ்வரரர், பாசுபதநாதர்

இறைவியார் திருப்பெயர் : சற்குணாம்பாள், நல்லநாயகி
தல மரம் : மூங்கில்

தீர்த்தம் : கிருபா தீர்த்தம், தீர்த்தக் குளம். (ஆலயத்தின் எதிரில் உள்ளது.)

வழிபட்டோர் : நாரதர், அர்ச்சுனன் முதலியோர்

புராணப் பெயர் : திருவேட்களம்

பாடியவர்கள் :  திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்

தேவாரப்பபாடல் பெற்ற சிவத்தலங்களில் முதலானது சிதம்பரம். இரண்டாவது திருவேட்களம். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிதம்பரத்தை அடுத்துள்ள திருவேட்களம். இரண்டாயிரம் ஆண்டு பழமையான இங்கு தான் அர்ஜுனனுக்கு இறைவன் பாசுபதம் வழங்கினார். அம்மன் நல்லநாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் ஒரு கையில் தாமரையும், ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். இவளுக்கு எதிரிலும் நந்தி உள்ளது.

 தொழுபவர்க்கு அல்லல் இல்லை என்கிறார் திருநாவுக்கரசர்.


ஒரு முறை சம்பந்தர் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க வருகிறார். அப்போது அவர் திருவேட்களத்தில் தங்கி சிதம்பரம் நடராஜரை தரிசித்துள்ளார். 

திருவேட்களம் பற்றி சம்பந்தர் பாடும் போது,"வேட்கள நன்னகர்' என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,"சிறப்புடன் வாழ வாழ்வில் ஒரு முறையாவது "திருவேட்களம் போ", என்றும், அம்பிகையை "பெண்ணில் நல்லாள்' என்றும் குறிப்பிடுகிறார். அருணகிரிநாதர் இத்தல முருகனை திருப்புகழில் பாடியுள்ளார்.

வைகாசி விசாகத்தில் அஸ்திரம் பெற்ற அர்ஜுனன் 


அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.
அம்பிகையின் சன்னதியில் 4 தூண்களிலும் அர்ஜுனன் தன் ஆயுதங்களை வைத்தல், ஒரு காலில் நின்று தவம் புரிதல், இறைவன் வேடன் வடிவம் எடுத்தல், சிவனும் அர்ஜுனனும் சண்டையிடுதல் போன்ற சிற்பங்கள் சிறப்பானவை!

கோவில் அமைவிடம் : சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை நகர் செல்லும் சாலையில் உள்ளது. (அண்ணாமலை பல்கலைகழகப் பகுதியைத் கடந்து சென்றால் எளிது)

சிவனை நோக்கி தவத்தில் ஈடுபட்டுள்ள அர்ச்சுனரின் கவனத்தை சிதறடிக்க விரும்பிய இந்திரன், தேவலோக பெண்களை அனுப்பி வைக்கிறார். அவர்களால், அர்ச்சுனன் கவனத்தை சிதறடிக்க முடியவில்லை. அர்ச்சுனனின் மன வலிமையை மெச்சிய இந்திரனும், சில அஸ்திரங்களை அர்ச்சுனருக்கு வழங்கி செல்கிறார்.


கிராதார்ஜுநீயம் -12ம்  திருமுறை
37 கழறிற்றறிவார் நாயனார் புராணம் 
பாடல் எண் : 108
திருச்சிற்றம்பலம் 
நெல்வேலி நீற்றழகர்
    தமைப்பணிந்து பாடிநிகழ்
பல்வேறு பதிபிறவும்
    பணிந்தன்பால் வந்தணைந்தார்
வில்வேட ராய்வென்றி
    விசயன்எதிர் பன்றிப்பின்
செல்வேத முதல்வரமர்
    திருவிரா மேச்சரத்து
திருச்சிற்றம்பலம்
"வில்வேட ராய்வென்றி     விசயன்எதிர் பன்றிப்பின் செல்வேத முதல்வரமர் " 
 – இந்த வரிகளுக்கு “ சிவக்கவிமணி ”  C K சுப்பிரமணிய முதலியார் அவர்களின் பெரிய புராண உரைக்குறிப்பு – பார்க்க அவரது  உரை – ஏழாம் பகுதி - கழறிற்றறிவார் நாயனார் புராணம்

No comments:

Post a Comment