தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட உலகின் முதல் பைபிள்: தஞ்சையில் காணாமல் போய் லண்டனில் கண்டுபிடிப்பு
https://www.dinamalar.com/news_detail.asp?id=3066404
தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில், இருந்து திருடு போன புதிய அத்தியாயம் என்னும் பைபிள் லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இது தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட உலகின் முதல் பைபிள் என்னும் சிறப்புடையது.பார்த்தோலொமஸ் சீகன் பால்க் என்பவர் தென் இந்தியாவின் சிறந்த கிருத்துவ மதபோதகர். 1682ம் ஆண்டு ஜெர்மன் நாட்டிலுள்ள சாக்சானி என்ற நகரத்தில் பிறந்து பாலே பல்கலைக்கழகத்தில் படித்து லுாதரன் தேவாலயத்தில் கிருத்துவ மதபோதகராக இவர் பணியாற்றினார். டென் மார்க் நாட்டு மன்னரின் வேண்டுகோளை ஏற்று இவரும் கென்ரிக் என்பவரும் தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடியில் டச்சு காலனி வசம் இருந்த பகுதியில் மதபோதகராக பணிபுரிய கடந்த 1706ம் ஆண்டு இந்தியா வந்தார். இங்கு அவரே ஒரு அச்சகத்தை நிறுவி அதில் தமிழ் மொழியில் இந்திய நாட்டு கலாச்சாரம் மற்றும் மதம் சம்மந்தமான படைப்புகளை வெளியிட்டார். இவர் பைபிளின் "புதிய அத்தியாயத்தை" தமிழில் 1715 ம் ஆண்டு மொழி பெயர்த்தார். இவர் 1719 ம் ஆண்டு மறைந்தார்.
தமிழகத்தில் இருந்து பைபிள் திருட்டு லண்டன் மியூசியத்தில் கண்டுபிடிப்பு
இந்த தமிழ் மொழிபெயர்ப்பான புதிய அத்தியாயம் மட்டுமல்லாது இரண்டு தேவாலயங்கள் மற்றும் ஒரு பிரார்த்தனை கூடத்தை கட்டியதோடு 250 க்கும் மேற்பட்ட கிருத்துவர்களுக்கு ஞானஸ்தானமும் வழங்கியுள்ளார். சீகன் பால்க் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்ட ஒரு அரிய வகை பைபிள் (புதிய அத்தியாயம்) அப்போதைய தஞ்சாவூர் சரபோஜி மன்னருக்கு பரிசாக அந்த சமயத்தில் வழங்கப்பட்டது. அந்த புத்தகம் பிற்காலத்தில் தமிழக அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு தஞ்சை சரஸ்வதி மகால் நுாலகம் அருங்காட்சியகத்தில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
விலைமதிப்பில்லாத இந்த பைபிளானது காணாமல் போய்விட்டதாக கடந்த 2005ம் ஆண்டு சரஸ்வதி மகால் அருங்காட்சியகத்தின் நிர்வாக அலுவலர் தஞ்சாவூர் மேற்கு போலீசில் கொடுத்த ஒரு புகாரானது கண்டுபிடிக்க இயலாத வழக்காக முடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த புராதானமான பைபிள் களவுபோனது தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தது. வெளிநாட்டிலுள்ள சிலைகள் மற்றும் கலைபொருட்களை விரைந்து மீட்கும் முயற்சியாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு, டிஐஜி ஜெயந்த் முரளி, உத்தரவின் பேரில், ஐ ஜி தினகரன், காணாமல் போன இந்த பைபிளை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்தார்.
இத்தனிப்படையினர் அந்த அருங்காட்சியகத்தின் பார்வையாளர் பதிவேடுகளை பார்வையிட்ட போது சில வெளிநாட்டினர் கடந்த 2005ம் ஆண்டு அருங்காட்சியகத்திற்கு வந்து சென்றது தெரிய வந்தது. ஒரு குழுவாக வந்த இவர்கள் மதபோதகர் சீகன் பால்க் அவர்களின் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சிகளுக்காக இங்கே வருகை தந்ததும் சீகன் பால்க் சம்மந்தப்பட்ட இடங்களையும் தொண்டாற்றிய நிறுவனங்களை பார்வையிடுவதையும் நோக்கமாக கொண்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இத்தனிப்படையினர் பல்வேறு வெளிநாட்டு அருங்காட்சியகங்களின் வலைதளங்களை ஆராய்ச்சி செய்ததில் காணாமல் போன 17ம் நுாற்றாண்டில் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டிருந்த ஒரு அச்சகத்தில் அச்சிடப்பட்ட சரபோஜி மன்னரின் கையெழுத்தோடு கூடிய இந்த திருடப்பட்ட பைபிளானது கிங்ஸ் கலெக்ஷன் என்ற லண்டனை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் வலைதளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
சிலை திருட்டு தடுப்பு பிரிவினரின் பல்வேறு புலன் விசாரணையில் மேற்படி பைபிள் சரஸ்வதி மகால் நுாலகம் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை யுனேஸ்கோ ஒப்பந்தத்தின் மூலமாக திரும்ப கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது எவ்வாறு, யார் மூலம் அங்கு சென்றது என்பது பற்றிய விசாரணையும் நடந்து வருகிறது.
No comments:
Post a Comment