Saturday, July 2, 2022

கபிலர் குன்று (கல் )

கபிலர் குன்று: கபிலர் உயிர்விட்டதாக கருதப்படும் இடத்தில் அமைந்துள்ள குன்று. விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் வட்டத்தில் கபிலர் குன்று உள்ளது. இங்கு கபிலர் உயிர்துறந்தார் என்றும் ஆகவே கபிலக்கல் என்னும் பாறை அவர் நினைவாக உள்ளது என்றும் கல்வெட்டுச்செய்தி ஒன்று உள்ளது.

கபிலர் குன்று என்பது கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த இடமாகும். இது தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் பேரூராட்சி அருகே அமைந்துள்ளது. நண்பரும் வள்ளலும் ஆன மன்னன் பாரியின் மறைவுக்கு பிறகு, பாரிமகளிர் அங்கவை சங்கவை என்பவர்களை திருக்கோவிலூர்பார்ப்பான் ஒருவனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு, தென்பெண்ணை ஆற்றில் உள்ள ஒரு குன்றில் வடக்கு பக்கம் அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார்.

திருக்கோவிலூரின் தென் பெண்ணையாற்றில் அமைந்துள்ள "கபிலர் குன்று" (கபிலக்கல்) என்னும் இடத்தில் கபிலர் உயிர்துறந்தார் என ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீட்டரில் வீரட்டானேசுவரர் கோயிலின் அருகில் தென்பெண்ணையாற்றின் நடுவில் "கபிலர்குன்று" உள்ளது. கபிலர்குன்று என இன்று அழைக்கப்பட்டாலும் "கபிலக்கல்" என்றே இந்த இடத்தைக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது.

கபிலர் குன்று அண்மைக் காலங்களில் "இடைச்சி குன்று" என்று அழைக்கப்பட்டது. இவ்விடம் தற்போது தமிழக அரசின் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட இடமாகப் பராமரிக்கப்படுகிறது. கபிலர்குன்று என்பது தனித்த பாறையும் அதன்மேல் சிறுகோயில் அமைப்பில் கட்டப்பட்ட கட்டடமும் கொண்டது. கோயில் உள்ளே சிவலிங்கம் உள்ளது. செங்கல் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடத்தின் பழைமை மாறாமல் இன்று மெருகு ஊட்டப்பட்டு உள்ளது. கட்டட அமைப்பை கருத்தில் கொண்டு, கபிலர்குன்று 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டடபாணி எனத் தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். கோயிலின் மேலே நான்கு பக்க மேல்பகுதிகளிலும் கடவுள் சிற்பங்கள் தெரிகின்றன. அச்சிலையின் மேல்பகுதியில் இரண்டு ஆண் உருவங்களும், இரண்டு பெண் உருவங்களும் தெரிகின்றன. பெண் உருவங்களின் முகம் பொலிவுடன் காணப்படுகின்றன. இப்பெண் உருவங்கள் அங்கவை, சங்கவையாகவும், ஆண் உருவம் அவர்களை மணந்தவர்களாகவும் கருத இடம் உண்டு. அல்லது பாரி, கபிலர் உருவங்கள் என்பதும் ஆராயப்பட வேண்டியுள்ளது. இவை மெருகு ஊட்டப்பட்டு உள்ளதால் எக்காலத்தைச் சார்ந்தவை எனக் கணக்கிட முடியவில்லை.

பறம்புமலையில் வாழ்ந்த கபிலர் பார்ப்பனர்களிடம் பாரிமகளிரை ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்து உயிர்விட்டார் என இலக்கியங்கள் குறிப்பிடும்பொழுது [1] திருக்கோவிலூர் வீரட்டானேசுவரர் கோயிலின் கருவறையின் வடபுறச்சுவரில் உள்ள முதலாம் இராசராசசோழனின் காலத்துக் கல்வெட்டில்,"செஞ்சொற் கபிலன் மூரிவண் தடக்கைப் பாரிதன்னடைக்கலப் பெண்ணை மலையர்க்குதவி மினல்புகும் விசும்பின் வீடுபேறெண்ணி அந்தரிக்ஷம் செல கனல்புகும் பெண்ணை அலைபுனல் அழுவத்து கபிலக் கல்லது" [2] எனும் தொடர்கள் இடம்பெற்றுள்ளன.

சங்கப்பாடல் கபிலர் வடக்கிருந்து உயிர் நீத்தார் எனக் கூறும்போது, கல்வெட்டானது தீயில் இறங்கி உயிர் நீத்தார் என்கிறது.

இக்கல்வெட்டில் இராசராசனின் தாய் வானவன் மாதேவி மலையமான் குலத்தில் தோன்றியவர் எனவும், மலையமான் குலத்திற்கு வீரட்டானேசுவரர் கோவில் குலதெய்வம் எனவும் அறிய முடிகிறது. அதுபோல் அக்கோயிலின் பெருமையைச் சொல்லும்பொழுது கோயிலின் அருகே உள்ள பெண்ணையாற்றில் உள்ள கபிலக்கல்லில் கபிலர் உயிர்நீத்தார் எனவும் கூறுகிறது.

இடம்:  விழுப்புரத்தில் இருந்து ஏறத்தாழ 40 கி.மீ தொலைவில் திருக்கோயிலூர் உள்ளது . பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோயிலின் அருகில் இக்குன்று தென்பெண்ணை ஆற்றின் நடுவில் உள்ளது . இது ஒரு பாறைமேல் அமைந்துள்ள இன்னொரு சிறிய பாறை. அதன்மேல் மிகச்சிறிய கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது..  
கோயில் அமைப்பு: செங்கற்களாலும் சுதையாலும் கட்டப்பட்ட இக்கோயில் பதினான்காம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.அதற்குள் சிவலிங்கம் நிறுவப் பட்டுள்ளது. துறவுபூண்டு உயிர்விடுபவர்களின் பள்ளிப்படைகளில் சிவலிங்கம் நிறுவப்படும் வழக்கம் உண்டு என்பதனால் இது கபிலரின் பள்ளிப்படை என கருதப்படுகிறது. நெடுங்காலம் இங்கே குன்றுப்பாறைமேல் லிங்கம் மட்டும் இருந்திருக்கலாம் என்றும் கோயில் பிற்காலத்தையது என்றும் ஆய்வாளர் கூறுகிறார்கள்.

கோயிலின் மேலே தெய்வச் சிற்பங்களுடன் இரண்டு ஆண் உருவங்களும், இரண்டு பெண் உருவங்களும் தெரிகின்றன. அப்பெண் உருவங்கள் அங்கவை, சங்கவையாகவும், ஆண் உருவம் கபிலர், மற்றும் மலையமான் என்றும் கருதப்படுகிறது. கபிலர் குன்று  தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது .

வரலாறு:இன்று விழுப்புரம் மாவட்டத்திலுள்ள் திருக்கோவிலூரை தலைமையாக கொண்ட நாடு மலாடு என்றும் மலையமான் நாடு என்றும் அழைக்கப்பட்டது. அந்நாட்டை மலையமான்கள் ஆட்சி செய்தனர். அவர்களின் மலை முள்ளூர் எனப்பட்டது. மலையமான் திருமுடிக் காரி என்னும் அரசன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். கபிலர் மலையமான் திருமுடிக்காரியை பாடியுள்ளார் (புறநானூறு 121, 122, 123, 124). முதலாம் ராஜராஜ சோழனின் அன்னை மலையமான் வம்சத்தைச் சேர்ந்தவர். ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழனின் படைத்தளபதிகளாகவும் மலையமான்கள் இருந்தனர்.

வேள் பாரி மூவேந்தர்களால் கொல்லப்பட்ட பின் அவர் நண்பரான கபிலர் அவனுடைய மகள்களை மன்னர் எவருக்கேனும் மணமுடித்து வைக்க முயன்று இருங்கோவேள் முதலியவர்களை அணுகினார். அவர்கள் மறுத்துவிட்ட நிலையில் பாரிமகளிரை அந்தணரிடம் அளித்துவிட்டு கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்தார் (புறநாநூறு 236 ).

பொஆ13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருக்கோவிலூர் கல்வெட்டு கபிலர் பாரிமகளிரை திருக்கோயிலூர் மலையமானுக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டு நெருப்பில் இறங்கி உயிர்விட்டதாகச் சொல்கிறது. அந்த இடமே பின்னர் கபிலர் கல் என அறியப்படுகிறது என்று ஆய்வாளர் கூறுகிறார்கள்.

அரசாணை எண். 80/த.வ.ப.துறை/நாள்/17.01.85 வழியாக இச்சின்னம் தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டு கபிலரின் நினைவிடமாக கருதப்படுகிறது

கோவலூர் புராணம்: கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் தமிழகம் சந்தித்த கலைப் பண்பாட்டுச் சரிவிற்குப் பின்பு 15-ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி ஏற்பட்ட போது கபிலக்கல்லுக்குப் புராண அடிப்படையில் புதிய கதை எழுதினர். கபிலச்சருக்கம் என்ற தலைப்பில் கோவலூர் புராணம் இயற்றினர். கபிலன் என்னும் தவமுனி தன் இடர்களை நீக்க திருக்கோவலூர் பெண்ணையாற்றில் உள்ள பாறை மீது லிங்கம் வைத்து வழிபட்டுப் பின்னர் சிவனடி சேர்ந்ததாக புராணம் கதைக் கூறுகின்றது.

கோவலூர் புராணத்திற்கும் 150 ஆண்டுகளுக்கு முன்னர் அப்புராணத்தைப் பற்றிய ஓவியம் தீட்டப்பட்டிருக்கிறது. அவை திருக்கோவலூர் கோபுர விதானத்தில் தீட்டப்பட்டது. அதில் ஒரு காட்சியில் பெண்ணையாற்றில் உள்ள கற்பாறை மீது சிறு கோவிலில் லிங்கத்தை கபில முனிவர் பூஜை செய்வது போன்ற காட்சியுள்ளது. அதன் கீழே கபிலமுனி சருக்கத்தின் குறிப்பும் தமிழில் உள்ளது. அதன் அருகில் ஔவையார் பாரி மகளிர் திருமணத்திற்காக விநாயகரை வணங்கும் காட்சியும், மேலும் பல கோவலூர் புராணக் காட்சியும் இடம்பெற்றுள்ளன.

கோவலூர் புராணத்தில் தெய்வீக அரசன் கதையில் பாரி சிங்கள நாட்டின் அரசனாகச் சித்தரிக்கப்படுகிறான். பாரி மகளிர் அங்கவை, சங்கவை பாரியின் இறப்பிற்கு பின் ஔவையார் திருக்கோவலூர் மன்னன் தெய்வீகனுக்கு திருமணம் செய்துவைத்ததாகவும் குறிப்பு உள்ளது. கி.பி.15-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 19-ஆம் நூற்றாண்டு இறுதிவரை திருக்கோவலூரில் கபிலக்கல் மீது கோவில் இருந்ததும். அதிலிருந்த லிங்கம் கபிலேசுவரர் என்றழைக்கப்பட்டதும் அறிய இதன் மூலம் முடிகிறது.

திருக்கோயிலூர் கல்வெட்டு:திருக்கோவிலூர் வீரட்டானேசுவரர் கோயிலின் கருவறையின் வடபுறச்சுவரில் உள்ள முதலாம் இராஜராஜசோழன் காலத்துக் கல்வெட்டு இவ்வாறு சொல்கிறது

செஞ்சொற் கபிலன் மூரிவண் தடக்கைப்

பாரிதன்னடைக்கலப் பெண்ணை மலையர்க்குதவி

மினல்புகும் விசும்பின் வீடுபேறெண்ணி

அந்தரிக்ஷம் செல கனல்புகும் பெண்ணை

அலைபுனல் அழுவத்து கபிலக் கல்லது”                         

https://www.youtube.com/watch?v=vJA6tEJJWZk

மூவேந்தர்களுக்கும் மலையமான் திருமுடிக்காரி கண்டால் பயம் தான் ....மிகப்பெரிய போர்கள் நடைபெறும் போது மலையமான் திருமுடிக்காரியின் அணி எங்கு இருக்கிறதோ அந்த அணிதான் வெற்றிபெறும் என்பது அவர்களுக்கு தெரியும் ....பல மன்னர்களிடம் சென்ற கபிலர் பாரியின் மகளிர் அங்கவை மற்றும் சங்கவை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் .....மூவேந்தர்களுக்கு பயந்து எந்த ஒரு மன்னரும் திருமணம் செய்து கொள்ளவில்லை ....இறுதியாக திருக்கோவலூர் மன்னன் மலையமான் திருமுடிக்காரியின் மகன் தெய்வீகனுக்கு அங்கவை மற்றும் சங்கவை திருமணம் செய்து கொடுத்தார் ....தனது நண்பன் பாரி தனக்கு கொடுத்த கட்டளையை முடித்துவிட்டு திருக்கோவிலூர் தென்பெண்ணை நதிக்கரையில் வடக்கிலிருந்து உயிர் துறந்தார் கபிலர் ....ஆண்டுதோறும் கபிலருக்கு பெயரில் தமிழக அரசு விருது கொடுத்துக் கொண்டிருக்கிறது ....முன்னதாக இங்கு இருக்கும் சான்றோர்கள் கபில பெருமானுக்கு ஐந்து நாட்கள் விமர்சியாக விழா எடுப்பார்கள் ....இன்றளவும் அது தொடர்கிறது ....                              





No comments:

Post a Comment