பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் சாத்தியமே: கோவில் சொத்து தொடர்பான வழக்கில் ஐகோர்ட் கருத்து
ஜூலை 02, 2022 சென்னை-கோவில் சொத்துக்கள் வாயிலாக கிடைக்கும் வருவாயை, முறையாக வசூலிக்கும்படி அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், அவ்வாறு வசூலித்தால், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும் என, கருத்து தெரிவித்துள்ளது. https://www.dinamalar.com/news_detail.asp?id=3066956
தமிழகத்தில், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் பராமரிப்பு; கோவில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மீட்பது; வாடகை, குத்தகை தொகையை வசூலிப்பது. அறங்காவலர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்தது.
75 உத்தரவுகள்
இவ்வழக்கில், தமிழக அரசுக்கு, 75 உத்தரவுகளை சிறப்பு அமர்வு பிறப்பித்திருந்தது. 2021ல் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. உத்தரவுகளை அமல்படுத்தியதற்கான அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுஇருந்தனர்.இதையடுத்து, இவ்வழக்கு, சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 75 உத்தரவுகளில் 38 அமல் படுத்தப் பட்டதாகவும், 32 மறுஆய்வுக்கு உட்பட்டதாகவும், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஐந்து உத்தரவுகள், மாநில அரசுக்கு சம்பந்தமில்லாதவை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சிறப்பு அமர்வில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி கூறியதாவது:பழமை வாய்ந்த கோவில்கள் புனரமைக்கப்படுகின்றன; நிர்வாக அதிகாரிகள், பொதுப்பணித் துறையினர், அதற்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநில மற்றும் மாவட்ட அளவிலான குழுக்களின் ஆலோசனைப்படி, அதிகாரிகள் செயல்படுகின்றனர்.ஒரு கால பூஜை நடக்கும் கோவில்களுக்கான நிதி, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கோவில் கணக்குகளை தணிக்கை செய்ய, மாநில தணிக்கை துறை தலைவர் தலைமையில் ஐவர் குழு அமைத்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணும் பணி
அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களுக்கு சொந்தமான 5.82 லட்சம் ஏக்கர் நிலங்களில், 3.79 லட்சம் ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மீதி நிலங்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது.கோவில்களுக்கு சொந்தமான மதிப்பு மிக்க பொருட்களை வைக்க, அறைகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு சிறப்பு பிளீடர் கூறினார்.
15 தணிக்கையாளர்கள்
இதையடுத்து, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு கூறியதாவது:கோவில் புனரமைப்பு குழுக்கள் எடுக்கும் முடிவுகளை, மற்ற துறைகள் ஏற்க வேண்டும்; கணக்கு தணிக்கைக்கு குறைந்தபட்சம் 15 தணிக்கையாளர்கள் இருக்க வேண்டும்.அறநிலையத் துறை கோவில்களின் பணிகளுக்காக, இணையதளங்கள் வாயிலாக தனியார் அறக்கட்டளைகள் நிதி வசூலிப்பதை அனுமதிக்கக் கூடாது; அப்படிப்பட்ட இணையதளங்களை முடக்க வேண்டும்.கோவில் நிலங்களை மீட்பதில் தொய்வு ஏற்படக் கூடாது; ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, கட்டடங்களை 'சீல்' வைக்க வேண்டும்.
அனுமதியில்லாத குத்தகையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உடந்தையாக அதிகாரிகள் இருந்தால், நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநிலையத் துறை கோவில்களின் சொத்துக்கள் வாயிலாக வரும் வருவாயை, முறையாக வசூலித்தால், பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை, அரசால் தாக்கல் செய்ய முடியும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.பின், வழக்கு விசாரணையை, மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
No comments:
Post a Comment