“ராக்கட்ரி”…. திரை விமர்சனம்.
படத்தின் ஆரம்பக் காட்சியில் “ஶ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்” ஸ்லோகம் நம் காதில் கேட்கின்றது. கூடவே வானத்தின் மேல் இருந்து கீழே நம்மை மெதுவாக அழைத்துச் செல்கின்றார் கேமராமேன் சிர்ஷா ரே. கீழே இறங்கி வரும் கேமரா, கேரளாவில் திருவந்தனபுரத்தில் ஒரு தெருவில் இருக்கும் ஒரு வீட்டை காட்டுகின்றது. ஸ்லோகம் பின்னாடி நம் காதுகளில் ஒலித்த வண்ணமே இருக்கின்றது. வீட்டினுள்ளே சிம்ரனும், அவரது மகள், மருமகன், மகனின் உரையாடல் நடக்கின்றதை காண்பிக்கின்றார் கேமராமேன். அடுத்ததாக, பக்கத்தில் இருக்கும் அறையில் பூஜை செய்து கொண்டு இருக்கும் மாதவனின் முதுகு காண்பிக்கப்படுகிறது. பின்பு, தனது கையில் இருக்கும் தேங்காயை ஓங்கி தரையில் உடைத்து, தான் இயக்கும் இந்த முதல் படத்தை கடவுளுக்கு முன்பாக துவக்கி வைக்கின்றேன் என்பதை சிம்பாளிக்காக நமக்கு சொல்வதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது.
1970 ல் இஸ்ரோவில் திரவ எரிபொருள் என்ஜினை கண்டுபிடித்தவர் விஞ்ஞானி நம்பி நாராயணன். விண்வெளித் துறை வரும் காலங்களில் திரவ தொழில் நுட்பத்தை நோக்கி பயணிக்கும் என்பதை முன்கூட்டியே கண்டறிந்தவர் நம்பி. இன்றைய ராக்கெட் தொழில் நுட்பத்தில் பயன்படுத்தும் கிரையோஜனிக் எஞ்சினை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியதில் நம்பி நாராயணனின் பங்கு அதிகம். 1994 ல் விஞ்ஞான தொழில் நுட்பத்தை வேறு நாடுகளுக்கு விற்றதாக அவர் மேல் போடப்பட்ட பொய் வழக்கால், 50 நாட்கள் அவரை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர். அந்த வழக்கில் இருந்து 4 வருடம் கழித்து குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இவரது சாதனைகளோடு கூடிய சோதனைகளை படமாக எடுத்து திரையில் நிஜ நம்பி நாரயணனாகவே வாழ்ந்து காட்டி, ஜெயித்தும் இருக்கிறார் மாதவன். இது போல ஒரு படம் எடுக்க முனைந்ததிற்கே மாதவனைப் பாராட்ட வேண்டும்.
சாக்லேட் நடிகராகவே நாம் அனைவரும் பார்த்து வந்த மாதவன், முதல் முறையாக கதை,திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் என அனைத்து துறைகளின் பாரத்தையும் தன் முதுகில் சுமந்து கொண்டு வீறு நடைபோட்டு வெற்றியும் அடைந்துள்ளார். நம்பி நாராயணின் உடல் மொழிகள் அனைத்தும் ஒன்று விடாமல் உள்வாங்கி, திரையில் அதை அப்படியே வெளிப்படுத்தி உள்ளார். அவரைப்போலவே வயிறும், முடியும், நடையும், பேச்சும் என முற்றிலும் தன்னை மாற்றிக்கொண்டதில் அவரின் மெனக்கெடல் நன்றாக தெரிகின்றது.
மிக நுணுக்கமாக விஞ்ஞானக் குறிப்புகளை ஆராய்ந்து, அதன் விபரங்களை சேகரித்து நமக்கு திரையில் புள்ளி விபரம் போல் வைக்கின்றார் மாதவன். மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கில் உள்ள டெக்னிக்கல் பெயர்களை அவர் கூறும் போது நம்மால் உள்வாங்க கடினமாக இருந்தாலும், படம் வேகமாக நகரும்போது அவரின் நோக்கம் என்ன, நம் இந்திய நாட்டுக்காக அவர் ஏன் இப்படி பாடுபடுகிறார் என்பதை உணர்ந்து கொண்டு ஒரு கட்டத்தில் நாமும் அவரோடு இணைந்து பயணிக்க ஆரம்பித்து விடுகின்றோம். தேவை இல்லாத காட்சிகள் வைக்காமல், திரைக்கதையை தொய்வு இல்லாமல் கையாண்ட விதம் மிக சிறப்பு.
சூர்யா நடித்துள்ளார். டிவி சேனலின் மூலம் நடிகர் சூர்யாவாகவே வந்து மாதவனிடம் பேட்டி எடுக்கின்றார். ஃப்ளாஸ்பேக்காக நகரும் கதைக்கு நடு நடுவே சூர்யாவின் பேட்டி வந்து போவது படத்தின் கதைக்கு இன்னும் வலு சேர்த்துள்ளது. 1970,80 ஆண்டுகளில் இருப்பது போலவே உடைகள், சாலையில் வண்டிகள், காட்சிகள் என அனைத்தையும் தத்ரூபமாக காட்டி இருக்கின்றார். சபாஷ்.
படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருப்பது இசையும், ஒளிப்பதிவும். ராக்கெட் தரையை விட்டு கிளம்பும்போது வரும் சப்தத்தையும், அது எப்படி காது கிழிய கிளம்புகிறது என்பதை கேமரா மூலம் பெரிய திரையில் காணும்போது பிரம்மாண்டமாக இருக்கிறது. இந்தப்படத்தில் சிம்ரன், ஏனைய நடிகர்களும் மிக சிறப்பாக செய்துள்ளனர்.
யாரும் எதிர்பாராத அந்த க்ளைமேக்ஸ் காட்சி பார்க்கும் அனைவர் கண்களையும் குளமாக்கிவிடுகிறது.
அனைத்து தரப்பினரும் தியேட்டருக்கு சென்று பெரிய திரையில் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு தரமான படம் இது. இந்த நம்பி நாராயணன் போல இன்னும் எத்தனை விஞ்ஞானிகளின் வாழ்க்கை சிதைந்து போய் இருக்கிறது என நமக்குத் தெரியாது.
இவரது வாழ்க்கையை வெளி உலகத்திற்கு சினிமாவின் மூலமாக கொண்டு சேர்த்திய நடிகர் மாதவன் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்.
ராக்கட்ரி……..”சாதனை”
நம்பி நாராயணன், ஆர் மாதவன், டி எம் கிருஷ்ணா மற்றும் கொஞ்சம் ராக்கெட்ரியும்
நம்பி நாராயணனுடைய வரலாற்றுப் படம் (Biopic) எடுக்கிறார்கள் எனும்போதே எனக்கு இயல்பாக ஆர்வம் எழுந்தது. 90களின் சமயத்தில்தான், இந்திய பத்திரிகைத்துறையில் இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் மையம் கொண்டிருந்தது. இப்படியெல்லாம் நடப்புலகின் புதிரான சம்பவங்களை அம்பலப்படுத்துவது அல்லவா பத்திரிகை தர்மம் என்று மிகவும் உணர்ச்சி மேலீட்டோடு கவனித்து வந்த பல வழக்குகளில் ஒன்று நம்பி நாராயணன் வழக்கு.
பிறகு அவர் ஜாமீனில் வெளிவந்தது, அவர் மேலான குற்றசாட்டுகள் நிரூபணம் ஆகாமல் சிபிஐ கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி ஆனதெல்லாம் நடந்ததும், பத்திரிகைகள் அவர் மேல் கவிந்த வெளிச்சத்தை விலக்கிக் கொண்டுவிட்டன.
பத்திரிகைகளால் அதிகம் கண்டுகொள்ளப்படாத அந்தக் காலகட்டத்திலும், நம்பி நாராயணன் தன் மீது அபாண்டமாக போடப்பட்ட தேசத்துரோக களங்கத்தைப் போக்கிக் கொள்ள தொடர்ந்து சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டு வந்திருக்கிறார். உச்சநீதிமன்றம் அவருக்கு 50 இலட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் எனத் தீர்ப்பளிக்க, கேரள அரசு அவருக்கு 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்குகிறோம் என அறிவிக்க, மத்திய அரசு நம்பிக்கு பத்மவிபூஷன் விருது வழங்கிக் கௌரவிக்க என்று அந்தப் பழைய தேசதுரோக கேஸில் பல புதியத் திருப்பங்கள்.
இப்போது புலனாய்வு பத்திரிகை அலை ஓய்ந்து, சோஷியல் மீடியா வழியே போலரைஸ்ட் (Polarized) கருத்து கண்ணாடி வழியே மட்டும் எல்லா செய்திகளையும் கவனிக்கும் பெரும் கூட்டம் மிகுந்து விட்டது.
இந்த போலரைஸ்ட் மனநிலை மக்களுக்கான சராசரி சிக்கல் என்னவென்றால், நம்பி நாராயணனின் சட்டப் போராட்டத்தை மனமுவந்து ஏற்றுக் கொள்வதா அல்லது 'நெருப்பில்லாமல் புகையுமா? சும்மாவா கேஸ் போட்டிருப்பான்' என்று அடித்துவிடுவதா என்பதுதான்.
இப்போது நம்பி பல பேட்டிகள் கொடுத்து தன் தரப்பு வாதங்களை வலுவாகவே பொதுவில் முன் வைத்திருக்கிறார். அவருடைய கூற்றுகளை எல்லாம் தொகுத்துப் பார்த்தால் 90களில் இருந்த பத்திரிகை சுதந்திரமோ அல்லது இதழியல் அறமோ பெரிதும் கேள்விக்குறியாகத்தான் படுகிறது. ஆனால் அவர் மேல் சுமத்தப்பட்ட குற்றம் அப்படிப்பட்டது. மாலத்தீவிலிருந்து டூரிஸ்ட் வீசாவில் வந்து கேரளாவில் குடியமர திட்டமிட்ட மரியம் ரஷீதா என்ற பெண் வழியே பாகிஸ்தானுக்கு ராக்கெட் தொழில்நுட்பத்தை விற்று காசு பார்த்தார் என்கிற குற்றச்சாட்டு. ராக்கெட் டெக்னாலஜி, பெண்கள், அண்டை நாட்டு ஒற்றன் என்று பல அடுக்குகளில் அவர் சிக்க வைக்கப்பட்டிருந்தார். அவருடைய இஸ்ரோ நண்பர்களே அவரை நெருங்க பயந்தனர். போதாக்குறைக்கு, அப்போதுதான், இஸ்ரோவிலிருந்து விருப்ப ஓய்வு பெற அவர் விண்ணப்பம் வேறு அளித்திருந்தார்.
90களில் ஒருவரிடமிருந்தும் நம்பிக்கு ஆதரவான குரல் எழவில்லை. பிறகு 2000-ம் ஆண்டில் பிரதமர் வாஜ்பேயிக்கு அறிவியல் துறை ஆலோசகராக பொறுப்பேற்ற அப்துல் கலாம் கூட நம்பிக்கு நேர்ந்த அநீதி பற்றி உயர்மட்டத்தில் குரல் எழுப்பவில்லை. நம்பியும் கலாமும், விக்ரம் சாராபாய் காலத்தில் இருந்தே இஸ்ரோவில் ஒரே குழுவில் பணியாற்றிய சகாக்கள். அந்த தேசத்துரோக வழக்கின் தன்மை அப்படி பெரும் சிக்கலில் அமைந்திருந்தது நம்பியின் துரதிர்ஷ்டம்.
அந்த மோசமான மன அழுத்த சூழலிலும் நம்பி தன்னுடைய சட்டப் போராட்டத்தை கைவிடவில்லை என்பதுதான் அவருடைய மனத்திண்மைக்கு சான்று.
நம்பியின் சுயசரிதையும் படமாக எடுக்கப்படுகின்றது. அதுவும் இந்திய அளவில் பெரிய நட்சத்திர அந்தஸ்து உள்ள மாதவன் நடிக்கப் போகிறார் என்று தெரிந்த போது ஆர்வம் அதிகமாகியது உண்மைதான். ஆனால் தயரிப்பு சிக்கல், கொரோனா தொற்று சூழல் என அத்தனை இடர்பாடுகளினாலும் தாமதமாகி இப்போதுதான் வெளியானது.
பட வெளியீட்டு விழாவில், மாதவன், நம்பி நாராயணனின் விகாஸ் இஞ்சின் பிராஜெக்ட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுவதாக எண்ணிக்கொண்டு, 'இஸ்ரோ நிகழ்த்திய சாதனையில் நம்முடைய பஞ்சாங்க காலகணக்குகள் முக்கிய பங்கு வகித்தன' என்று பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகி விட்டது. .
சோஷியல் மீடியாவில் பலரும் மாதவனுடைய பேச்சை வைரலாக பகிர்ந்து ட்ரோல் செய்து வந்தனர். கர்நாடக பாடகரும், மகசசே விருது பெற்றவருமான டி எம் கிருஷ்ணாவும் தன் பங்குக்கு மாதவனின் பேச்சை கிண்டல் செய்து போட்டிருந்தார்.
இதன் பின்விளைவாலோ என்னவோ, முதல்நாள் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ரெவ்யூ போடும் யூட்யூபர்கள் "படம் என்னய்யா, ராக்கெட் பத்தியே பேசிக்கிட்டிருக்காங்க. நாங்கள்லாம் பாக்க வேணாமா. சுவாரசியமே இல்லியே" என்று சொல்லியிருந்தார்கள்.
நல்லவேளை, ஜான் நாஷைப் பற்றிய பயோபிக்கைப் பார்த்துவிட்டு "என்னமோ நோபல் பரிசுன்னாங்க. ஆனா ஒரேயடியா எக்க்னாமிக்ஸ், மேத்ஸ்ன்னு பேசிட்டே இருக்காங்க. நாங்க பாக்கிறதுக்கு சுவாரசியமா எடுக்க வேணாமா' எனக் கேட்டு சத்தாய்ப்பதற்கு முன் அந்தப் படமெல்லாம் தப்பித்து விட்டது.
இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை விளக்கியது போல, பட வெளியீட்டின் போது மாதவன் பேசியதில் அவருடைய பழமைவாத பெருமிதம் விஞ்சியிருந்ததேத் தவிர, அறிவியல் விளக்கமல்ல.
இத்தகைய அறிவியல் களத்தைக் கொண்ட படத்தை அவர் தன்னுடைய பழமைவாத பெருமிதம் கொண்டு குழப்பி வைத்திருப்பாரோ என்ற பயம் இருந்தது. ஆனால் நம்பியின் வாழ்க்கை வரலாற்றை இயன்ற அளவு கலப்படம் செய்யாமல் எடுத்திருக்கிறார் எனத்தான் சொல்ல வேண்டும். வெள்ளாள பிள்ளைமார் இனத்தை சேர்ந்த நம்பியின் வாழ்க்கையில் இருக்கக் கூடிய ஆன்மிக பற்றையும் அவருடைய அறிவியல் தீர்க்கத்தையும் சரிவிகிதத்தில் கொண்டு வந்திருந்தார்கள். ஆரம்பக் காட்சியில் ஐம்பது வயது நம்பியின் மனைவியாக சிம்ரன். அதுவும் பெண் மாப்பிள்ளை, பேத்தி என பெரிய குடும்பத்தின் பாட்டியாம். அவர் பிரமாதமாக ஆடியிருந்த 'மனம் விரும்புதே' பாடலில் சும்மா செட் பிராபர்ட்டியாக வந்து போகும் அப்போதைய இறுக்கமான சூர்யா, இப்போது மிகத் திறமையான ஸ்டார் நடிகராக மாறி, அப்படியே இளமையுடன் இந்தப் படத்திலும் இருக்க, சிம்ரனை மட்டும் அவசரமாக பாட்டியாக்கி விட்டார்கள் என்பது சற்று சோகமாகத்தான் இருந்தது.
மாதவனுடைய குருநாதரான மணிரத்னம் அளவிற்கோ, அல்லது அவருடைய சகாவான சுதா கோங்குரா அளவிற்கோ வரலாற்றை திருகி வாசகர்களுக்கு என்டெர்டெய்ன்மென்ட் கொடுக்கிறேன் என குழப்பிக் கொள்ளவில்லை மாதவன். அதற்காகவே மாதவனுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
டி எம் கிருஷ்ணா கர்நாடக சங்கீத விற்பன்னர் என்றாலும், அவர் முற்போக்கு சிந்தனை கொண்டவர் என எல்லாரும் அறிந்ததுதான். அப்படியான ஒரு பாரம்பரிய கலையில் முற்போக்கு சிந்தனை கலக்கக் கூடாது என்று மூர்க்கமாக எதிர்ப்பவர்களுடன் போராடியே அவர் ஒரு எக்ஸ்ட்ரீம் போராளி ஆகிவிட்டார். ஒரு திரைப்படத்திற்கான உருவாக்கத்தில் இருக்கும் பலகட்ட சோதனைகளும், அதில் முதலீடாக இடப்படும் பெரும் பணமும், பலருடைய உழைப்பும் அவர் அறிந்திருக்காததல்ல. இத்தனைக்கும் இந்தப் படம் பல இடியாப்ப சிக்கல்களைக் கொண்ட ஒரு தேசத்துரோக வழக்கையும், அதனைப் பற்றிய பின்புல உண்மைகளை முழுமையாக முன்வைக்கும் முயற்சி. நியாயமாக அவரைப் போன்ற முற்போக்கு சிந்தை கொண்டவர்கள் இது போன்ற முயற்சிகளை வரவேற்க வேண்டும். மாறாக அவசரகதியில் ட்ரோல் செய்து அந்த முயற்சியை களங்கப்படுத்தியிருக்க வேண்டாம்.
ஆனால், பொறுமையான செயல்பாடுகள் எல்லாம் கணக்கில் கொள்ளாமல் அந்தந்த நேரத்திற்கு கிடைப்பதைக் கொண்டு யாரையாவது அடிக்க வேண்டும் என்கிற மனநிலைக்கு பெரும்பான்மையான மக்கள் வந்துவிட்ட இந்த சமூக ஊடகங்களில் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
முதல்நாளே செய்து விட வேண்டும் என்று வெறியுடன் போடப்படும் மொக்கை விமர்சனங்கள், வைரல் ட்ரோல்கள் கடந்து இந்த ராக்கெட்ரி படம் சற்றேனும் மக்களை சென்றடையுமானால், இஸ்ரோ போன்றவற்றின் செயல்பாடுகள் பற்றி எளியோர் நிறைய அறிந்து கொள்ளலாம்.
நம்பி நாராயணன் தன்னுடைய இளமைக் காலத்தில் திரவ எரிவாயு ஏவூர்தி இயந்திர வடிவமைப்பில் செய்த ஆய்வுகளிலும் சோதனைகளிலும் ஈட்டிய வெற்றிக்கு இப்போது ஐம்பது ஆண்டு காலம் ஆகப் போகிறது. இந்த நீண்ட காலத்தில் பெரும்பகுதி அவர் மன உளைச்சலிலே கழித்திருக்கிறார் என்பதுதான் இந்தப் படம் நமக்குத் தரும் செய்தி.
இன்னமும் 100 ஆண்டுகள் கழித்தும் 'நம்பி மேல் போட்ட வழக்கில் கொஞ்சம் கூடவா உண்மை இருக்காது' என்று சர்ச்சை நடந்து கொண்டுதானிருக்கும் என்ற நம்பியின் ஆதங்கத்திற்கு நம்மிடையே பதிலில்லை.
ஆனால், எண்பது வயதுவரை தீர்க்கத்துடன் போரிட்டு, தன் மேல் சுமத்தப்பட்ட தீராக்களங்கத்தை ஓரளவுக்கேனும் துடைத்தெடுத்த நிம்மதியோடு சிந்தும் அவருடைய புன்முறுவல் நமக்கு எண்ணற்ற சேதிகளைச் சொல்கிற
No comments:
Post a Comment